கிணத்துக்கடவு தொகுதியை கேட்டு அண்ணாமலை ஆதரவாளர்கள் மறியல்; தீக்குளிக்க முயற்சி: அதிமுகவுக்கு பணியாற்ற மாட்டோம் என சபதம்

கோவை: கோவை மாவட்டத்தில் பாஜ, அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளை எதிர்பார்த்தது. ஆனால் கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது, பாஜ தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கிணத்துக்கடவு தொகுதியை எதிர்பார்த்து, தேர்தல் பணிகளை செய்து வந்த அண்ணாமலை ஆதரவாளரான முன்னாள் தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் மற்றும் கட்சியினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கிணத்துக்கடவு தொகுதியை பாஜவிற்கு ஒதுக்காததால் அதிருப்தி அடைந்த வசந்தராஜன் ஆதரவாளர்கள், 100 க்கும் மேற்பட்டோர் ஈச்சனாரி பகுதியில் உள்ள கோவை தெற்கு மாவட்ட பாஜ அலுவலகத்தில் நேற்று மாலை குவிந்தனர்.

அப்போது கிணத்துக்கடவு தொகுதியை பாஜவிற்கு ஒதுக்க கோரி, அவர்கள் முழக்கமிட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜ தொண்டர்கள் கட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது திடீரென தொண்டர் ஒருவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை சக கட்சி தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். மறியலில் ஈடுபட்ட பாஜ தொண்டர்களை சமரசப்படுத்திய நிர்வாகிகள், கட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல செய்தனர். அப்போது பேசிய பாஜ தொண்டர்கள் ‘‘கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக பலவீனமாக உள்ளது. இத்தொகுதியில் அதிமுக போட்டியிட்டால் தோல்வி அடைவது உறுதி. அதிமுகவிற்காக நாங்கள் தேர்தல் பணியாற்ற மாட்டோம். இத்தொகுதியை பாஜவிற்கு ஒதுக்க வேண்டும்’’ என்றனர்.

* 2021ல் அதிமுக தந்த மரியாதையை திருப்பி தருவோம்: பாஜ பதிவால் பரபரப்பு
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் அரவக்குறிச்சி அல்லது குளித்தலை தொகுதியை பாஜவிற்கு ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கையில் பாஜ நிர்வாகிகள் இருந்தனர். ஆனால் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் கரூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதுடன், மற்ற மூன்று தொகுதிகளிலும் அதிமுகவே களம் காணும் நிலை உறுதியானதால் பாஜவின் எதிர்பார்ப்பு முற்றிலும் சிதைந்துள்ளது. அதிமுகவின் இந்த தன்னிச்சையான முடிவை கடுமையாக விமர்சித்து, கரூர் மாவட்ட பாஜ ஐடிவிங் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில், “2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜவிற்கு எந்த அளவுக்கு மரியாதை தந்ததோ, அதே மரியாதையை இந்த தேர்தலில் நாங்கள் திருப்பி தருவோம்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வாசகம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: