அறிவிப்பும் இல்ல…சலுகையும் இல்ல… விவசாயிகள் கடும் ஆத்திரம்: டெல்டாவே வேணாம்னு ஓடும் பாஜ

 

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜ 50 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. குறிப்பாக மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் களமிறங்க ஆர்வம் காட்டுகிறது. அதே சமயம் டெல்டா மாவட்டத்தில் அதிக தொகுதிகளில் போட்டியிட முனைப்பு எதுவும் காட்டவில்லை.

திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 41 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 3ல் மட்டுமே போட்டியிட பாஜ முடிவு செய்துள்ளதாம்.

குறிப்பாக, மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தத்துக்காக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, மாநில பட்டியல் அணி துணைத்தலைவர் எஸ்ஜிஎம்.ரமேஷ் கோவிந்த்துக்காக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மாநில செயற்குழு உறுப்பினர் அகோரத்துக்காக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் ஆகிய 3 தொகுதிகளை மட்டும் அதிமுகவிடம் பாஜ கேட்டுள்ளதாம். இதற்கு காரணம் ஒன்றிய பாஜ அரசு மீது டெல்டா விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருப்பது தான்.

குறிப்பாக நெல் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும், ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினார். இதனடிப்படையில் ஒன்றிய குழு வந்து டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தது. நெல் மாதிரிகளையும் ஆய்வுக்கு எடுத்து சென்றது. ஆனால் ஈரப்பத அளவை உயர்த்த ஒன்றிய அரசு மறுத்து விட்டது.

அதேபோல் விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாததால், விவசாயிகள் ஒன்றிய அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் டெல்டாவில் களமிறங்கினால் தோல்வி நிச்சயம் என கருதியே பாஜ டெல்டா மாவட்டத்தில் போட்டியிட கவனம் செலுத்தவில்லை. இதுபற்றி டெல்டா விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கேட்டபோது, நெல் ஈரப்பத அளவை உயர்த்தி ஒன்றிய அரசு அறிவிக்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கண் துடைப்புக்காக ஒன்றிய குழு டெல்டாவுக்கு வந்து ஆய்வு செய்து சென்றுள்ளது. இப்போது பட்ஜெட்டிலும் ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை. எனவே விவசாயிகள் பாஜவுக்கு எதிராக தேர்தலில் எதிர்வினை ஆற்றுவார்கள். அது தெரிந்துதான் பாஜ டெல்டா மாவட்டங்களில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றனர்.

Related Stories: