கன்னிமாரா பொது நூலகம், அருங்காட்சியக வளாகத்தில் ரூ.85.80 லட்சத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ரூ.85.80 லட்சம் செலவில் சென்னை, கன்னிமாரா பொது நூலகம், எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். கார்ல் மார்க்ஸ் ஜெர்மனி, புருசியாவில் உள்ள ட்ரையர் நகரில், 5.5.1818 அன்று பிறந்தார். இவர் ஒரு ஜெர்மானிய தத்துவஞானி, புரட்சிகர, பொருளாதார நிபுணர் மற்றும் வரலாற்று ஆசிரியர் ஆவார்.

பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்ஸ் 1841ல் யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டம் பெற்றார். 1841ல் பட்டம் பெற்ற கார்ல் மார்க்ஸ், சில காலம் இதழியல் துறையில் பணிபுரிந்தார். தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக ஜெர்மனியை விட்டு வெளியேறி பாரிசு நகரம் சென்றார். 1847ல் தத்துவத்தின் வறுமை என்னும் முதல் நூலை வெளியிட்டார்.

உலகளவில் சமூக மற்றும் பொருளாதார சிந்தனைக்கு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கார்ல் மார்க்ஸ் 14.3.1883 அன்று மறைந்தார். கார்ல் மார்க்ஸ், பொருளாதார சிந்தனைகளை மக்கள் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3.4.2025 அன்று சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் சென்னையில் அவருக்கு புதிதாக சிலை நிறுவப்படும் என அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி சென்னை, எழும்பூர் அருங்காட்சியக வளாகம், கன்னிமாரா பொது நூலகத்தின் வாயிலில் ரூ.85 லட்சத்து 80 ஆயிரம் செலவில் நிறுவப்பட்டுள்ள கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக, கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கே.சுப்பராயன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்,

முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் இ.பரந்தாமன், நாகை மாலி, பிரபாகரராஜா, மு.பாபு, முகமது ஷா நவாஸ், துணை மேயர் மகேஷ்குமார், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் வைத்திநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* நல்லவை எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்
நல்லவை எங்கிருந்து வந்தாலும் வணங்கி ஏற்றுக்கொள்வோம். ஆதிக்கம் செலுத்தப் பார்த்தால் தடுத்து நிறுத்துவோம். இதுதான் திராவிட மாடல் என்று முதல்வர் கூறியுள்ளார். சென்னை, எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு:
மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு:

சிவந்தது சென்னை! “இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளை தவிர ஒன்றுமில்லை. அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது” என உலகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டிய பொதுவுடைமை தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் சிலை கன்னிமாரா பொதுநூலக வளாகத்தில் நிலைகொண்டது. நல்லவை எங்கிருந்து வந்தாலும் வணங்கி ஏற்றுக்கொள்வோம். அல்லவை ஆதிக்கம் செலுத்தப் பார்த்தால் தடுத்து நிறுத்துவோம். இதுதான் திராவிட மாடல். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: