பொருளாதார சூறையாடல் நடத்த வாசலை திறந்துவிட்டு இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டார் மோடி: அமைச்சர் ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள தகவல் வெளியான பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பிரதமர் மோடியும் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. திடீர் வர்த்தக உறவு ஏற்பட்டு, இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சதவீத வரி, 18 சதவீதமாக குறைந்திருக்கிறது. பிரதமர் மோடி, அமெரிக்கப் பொருட்களை மிக அதிகமாக 500 பில்லியன் டாலருக்கு எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண் பொருட்கள், நிலக்கரி மற்றும் பல பொருட்களைக் கூடுதலாக வாங்கசம்மதித்துள்ளார்’ எனச் சொல்லியிருக்கிறார் டிரம்ப்.

இது இந்திய விவசாயிகளுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். பொருளாதார சூறையாடலை அமெரிக்க நடத்த இந்தியாவின் வாசலை திறந்துவிட்டிருக்கிறார். ரூ.45 லட்சம் கோடி மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை இந்தியாவிற்குள் அனுமதிக்கும் அளவிற்கு இந்தியச் சந்தையைக் கட்டுப்பாடின்றித் திறந்து வைத்தால், இந்திய விவசாயிகள், வியாபாரிகள், சிறுகுறு தொழில்துறையினரின் வாழ்வாதாரம் சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும். மோடி தனது சுயநலத்தாலும், தவறான வெளியுறவுக் கொள்கையாலும், இந்திய விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் முடிவை எடுத்தபோதும் தன்னை விவசாயி எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பழனிசாமி இதுவரை வாய்திறக்காமல் மவுனமாக இருக்கிறார்.

Related Stories: