திருப்பத்தூர்: ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மதத்தை பயன்படுத்தி அரசியல் செய்து அதிகாரம் பெறுவது மனிதநேயத்தை புதைப்பதாகும். ஒரு மனிதனுக்கு சராசரியாக 422 மரங்கள் தேவை. மரங்களே மழை கொண்டு வரும். கேரளத்தில் மரங்கள் பெருகி உள்ளது. அதனால்தான் அதை கடவுள் தேசம் என்கின்றனர். நான் மக்கிய கழிவு மூலம் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு நோயற்ற சமூகம் உருவாக்குவேன். சிலிண்டர் கேஸ் தயாரிப்பேன். தூய பால் தருவேன்’ என்றார்.
பின்னர் திருப்பத்தூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:
ரஷ்யா, சீனா, இந்தியா தலையிட்டு இருந்தால், ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். அணு ஆயுதம் வைத்திருந்தால் அதனை ஈரான் பயன்படுத்தி இருக்கும். வள வேட்டைக்காக இதனை அமெரிக்கா செய்கிறது. அனைத்து நாடுகளும் அமெரிக்காவிடம் கடன் வாங்கி உள்ளது. அதனால் அமைதி காக்கின்றனர். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது குறித்து அமெரிக்கா கூறுகிறது. என் நாட்டு நிர்வாகத்தில் தலையிட நீ யார் என கேட்க முடியவில்லை. என் முன்னாடி நிற்பவர்கள், எனக்கு வாக்கு செலுத்துபவர்கள். காற்று அடித்தால் எல்லா திசையிலும் பறந்து போகும் பதர்கள் இல்லை எனக்கு வாக்கு அளிப்பவர்கள். புயலே அடித்தாலும் கொள்கைக்காக நின்ற இடத்திலேயே நிற்கும் நெல்மணிகள் எனக்கு வாக்களிப்பவர்கள். திரை கவர்ச்சியாளன் நான் இல்லை என கூறினார்.
