அதிமுக ஆட்சிக்கு வந்தால் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ‘இலவச ஃபிரிட்ஜ்’: 297 அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார் எடப்பாடி

சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்தால் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை 297 அறிவிப்புகளைக் கொண்ட அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாட்டில் 17வது சட்டமன்ற பேரவைக்கான பொதுத்தேர்தல் 23.4.2026 அன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் அதிமுக 8வது முறையாக ஆட்சி அமைக்கும் என்ற உறுதியுடன், நம் மக்கள் மத்தியில் தேர்தல் வாக்குறுதிகளை சமர்ப்பிக்கின்றோம். மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் மூலம் தமிழக மக்களின் நலனுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.

இந்த இயக்கத்திற்கென்று தனி கொள்கை உண்டு. மதச்சார்பின்மை, மனித நேயம், ஏழை, எளியோர் மேம்பாடு, சமூக நீதி, சமத்துவம், சிறுபான்மையினர் பாதுகாப்பு போன்றவை எங்களின் உயிர்நாடி. அவற்றில் எந்த சமரசமும் செய்துகொள்ளமாட்டோம். அதன்படியே நாங்கள் செயல்படுகிறோம்; தொடர்ந்து செயல்படுவோம்.

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சென்று, அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். அதன் அடிப்படையில், எங்களால் நிறைவேற்றக்கூடிய திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அளித்திருக்கிறோம். அது வருமாறு:
1. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 சிறப்பு உதவித்தொகை
2. குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூ.2,000 வழங்கப்படும்.
3. மகளிரைப் போல, ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்.
4. வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீடு வழங்கும் ‘அம்மா இல்லம் திட்டம்’.
5. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
6. வேலைக்குச் செல்லும் மகளிருக்கு ரூ.25,000 மானியத்துடன் 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
7. முதியோர் உள்ளிட்டவர்களுக்கான ஓய்வூதியங்கள் ரூ.2,000மாக உயர்வு.
8. வங்கிகளில் கல்வி கடன் பெற்று, வேலைவாய்ப்பு கிடைக்காமல், கடன் தவணையை செலுத்த முடியாமல் உள்ளவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அத்தொகையை அரசே ஏற்கும்.
9. வாழ்வாதார உதவியாக, ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
10. ஜல்லிக்கட்டில் வீரர்கள் காளையை பிடிக்கும்போது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.
11. இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர், சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
12. மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
13. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000ம்; பிளஸ்2 வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படும்.
14. மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவித்தொகை 8,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
15. ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்படும்.
16. கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
17. நகர பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
18. ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்து, சொந்த ஆட்டோ இல்லாதவர்கள், புதிய ஆட்டோ வாங்குவதற்கு ரூ.75,000 மானியமாக வழங்கப்படும்.
19. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு, குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து பெண்களுக்கும் தரமான, விலையில்லா சேலையும், ஆண்களுக்கு தரமான வேட்டியும் வழங்கப்படும்.
20. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிர்பதன பெட்டி (ஃபிரிட்ஜ்) விலையில்லாமல் வழங்கப்படும்.
21. தமிழ் நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்கில், படிப்படியாக மதுபானக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 297 அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி அதிமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார்.

Related Stories: