தவெக நிர்வாகிகளுடன் சந்திப்பு..? காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சஸ்பெண்ட்: செல்வப்பெருந்தகை அதிரடி நடவடிக்கை

சென்னை: தவெக நிர்வாகிகளை சந்தித்து பேசியதாக வெளியான தகவலை தொடர்ந்து காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக- அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு உடன்பாடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. புதிதாக களம் இறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் தவெக உடன் காங்கிரஸ் இணைய வேண்டும் என்று வெளிப்படையாக பேசத் தொடங்கினர். இதை கட்சி தலைமை கண்டித்ததை தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. இதையடுத்து கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் பேசிய காங்கிரசார் அதன் பின்பு எந்த விமர்ச்சனங்களையும் முன்வைக்கவில்லை. இதற்கிடையே, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தேர்தல் பணிகளில் காங்கிரசார் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். மேலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு மேலிட தலைவர்களை முட்டி மோதி வருகின்றனர். சத்தியமூர்த்திபவனில் நிர்வாகிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த பரபரப்புகளுக்கு இடையில் தவெகவில் ஒரு சில நிர்வாகிகள் இணையப் போவதாக கட்சியினர் மத்தியில் பேச்சு அடிப்பட்டது.

இது தொடர்பாக தவெக நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்ந நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் டி.செல்வம் என்பவரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ள கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் மிகவும் பரபரப்பாக செயல்படக்கூடிய ஒருவர் நீக்கப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர் தவெகவில் இணைய உள்ளதாகவும், அதற்காக கட்சியினர் சிலரை அழைத்து செல்வதும் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் வெளியான புகார்களை தொடர்ந்தே தமிழக காங்கிரஸ் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாக காங்கிரசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Stories: