மேற்குவங்கத்தில் பாஜகவை 50 தொகுதிக்குள் சுருக்குவோம்: மம்தா உறவினரான அபிஷேக் சபதம்

கொல்கத்தா: மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பாஜகவை 50 தொகுதிகளுக்கும் குறைவாக சுருக்கும் இலக்குடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளது. மேற்குவங்கத்தில் தற்போது சட்டப் பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 77 இடங்களை பிடித்திருந்தது. மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்த பல்வேறு வியூகங்களை பாஜக செய்து வருகிறது. இந்நிலையில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மம்தாவின் உறவினரான திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, கட்சியின் தேர்தல் பிரசாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘உங்கள் அனைவரின் ஆசியுடன் வரும் தேர்தலில் பாஜகவை 50 இடங்களுக்கு கீழ் கொண்டு வருவோம் என உறுதி ஏற்போம். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள், வீடு தேடி வரும் மருத்துவ சேவை, குழாய் மூலம் குடிநீர் மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். 100 நாள் வேலை திட்டம் மற்றும் ஆவாஸ் யோஜனா திட்டங்களுக்கான நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மக்களை நீக்குவதை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது.

பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் உறுதுணையாக இருப்பார்கள்’ என்று பேசினார். முன்னதாக கடந்த ஜனவரியில் ராம்பூர்ஹாட் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அபிஷேக் பானர்ஜி, ‘வரும் தேர்தலில் திரிணாமுல் கட்சி 250க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற வேண்டும்’ என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: