வேலூர்: வேலூர் அடுத்த காட்பாடியில் காட்பாடி மற்றும் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடந்தது. அமைச்சர் துரைமுருகன், தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசுகையில், ‘காட்பாடி தொகுதியின் வேட்பாளராக என்னை குறிப்பிட்டு பலர் பேசினீர்கள். ஆனால் திமுக பொதுச்செயலாளர் என்ற வகையில், அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ, அதன்பிறகுதான் வேட்பாளர் என வரும்.
இப்போதைக்கு உங்கள் மகிழ்ச்சிக்கு வேண்டுமானால் பேசிக்கொள்ளலாம். ஆனால் நான் தலைமைக்கு கட்டுப்பட்டவன். இதை நான் ரசிக்கவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இளமையில் இருந்து அறிந்தவன் நான். அவரது அரசியல் சாதுர்யம் என்னை வியக்க வைக்கிறது. அகில இந்திய கட்சிகளே நிதானம் இல்லாமல் இருக்கும்போது, திமுக தலைவர் சாதூர்யத்துடன் பொறுமையாக கூட்டணியை பேசி முடித்தார். இது உண்மையில் பாராட்டப்பட வேண்டியது. தற்போது அரசியல் பேச வேண்டாம் என நினைக்கிறேன்’ என்றார்.
தொடர்ந்து நிருபர்களிடம் கூறுகையில், ‘சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற போவதில்லை. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் வெற்று வாக்குறுதிகள். திமுக தேர்தல் அறிக்கை குழுவில் நானில்லை. தேர்தல் அறிக்கை பற்றி எனக்கு தெரியாது. விசிகவுக்கு மதசார்பற்ற கூட்டணியில் சீட்டுகள் ஒதுக்கப்பட்டதில், திருமாவளவனுக்கு திருப்திதான்’ என்றார்.
