டோவ் வண்டிதான் டபுள் இன்ஜின்: 5 ஸ்பேர் பார்ட்ஸ்தான் டாப் இன்ஜின்; ஒயிட் பெட்ரோல் போட்டா கூட ஓடாது; திண்டுக்கல் லியோனி

கேள்வி: பிரதமர் மோடி டபுள் இன்ஜின் என்கிறார், முதல்வர் டப்பா இன்ஜின் என்கிறார். இதுக்கு இடையில் நாங்க டாப் இன்ஜின் என்று விஜய் சந்துல சிந்து பாடுறாரே?
பதில்: மோடியின் டபுள் இன்ஜின் என்பது பாஜ ஆளும் 2, 3 மாநிலங்களில் எப்படி ஓடுது என்று எல்லாருக்கும் தெரியும். அதுக்கு எடுத்துக்காட்டு மணிப்பூர். டபுள் இன்ஜின் எங்க நாம பார்போம் என்றால், பழுதடைந்த வண்டியை இன்னொரு வண்டி டோவ் பண்ணி இழுத்துட்டு போகும். அது தான் டபுள் இன்ஜின். பழுதான வண்டி தான் எடப்பாடி பழனிசாமி. அவரை இழுத்துட்டு போற டோவ் வண்டி தான் பாஜ. அதில் மக்கள் யாரும் பயணம் செய்ய முடியாது. ரிப்பேர் ஆன வண்டிய ஒர்க்‌ஷாப்பில் நிறுத்துவதற்கு தான் இந்த டபுள் இன்ஜின் பயன்படும். டாப் இன்ஜின் என்று விஜய் சொல்வது, ரோட்டில், பாடி கட்டாமல் இன்ஜின் மட்டும் செல்வதை பார்த்திருப்பீர்கள். அதில் டிரைவர் மட்டும் இருந்து கொண்டு ஓட்டுவார். அருமையான இன்ஜின் தான். டிரைவர் தலையில் துணியை சுற்றிக் கொண்டு, கூலிங் கிளாஸ் மாட்டிக் கொண்டு ஓட்டி செல்வார். அந்த வண்டியால் மக்களுக்கு அஞ்சு பைசாவுக்கு பிரோயஜனம் கிடையாது. அது நல்ல வேகமாக போகும். ஆனால் மக்களுக்கு பயன்படாத டாப் இன்ஜின். பாடி கட்டாமல் ரோட்ல போகுறது தான் விஜய்யோட டாப் இன்ஜின்.

கேள்வி: விஜய் கட்சிக்கு இன்ஜினே இல்லை என்ற அண்ணாமலையின் விமர்ச்சனம் பற்றி?
பதில்: நானாவது பாடி கட்டாத இன்ஜின்னு சொன்னேன். அவர் இன்னும் கரெக்ட்டா கனிச்சிருக்காரு. இன்ஜினும் இல்ல.. எரிபொருளும் இல்ல. கொள்கை இல்லாத, எந்த இலக்கும் இல்லாத ஒரு கட்சி என்று அண்ணாமலை சொன்னது சரிதான். காரணம் என்னென்னா, தவெகவோட நிலமை அப்படி இருக்கிறது. விக்கிரவாண்டியில் கூடிய கூட்டத்தின் பாதி தான் அரியலூருக்கு போச்சு. அங்கே இருந்து நாமக்கல் போகும் போது அதிலும் பாதியா குறைந்துவிட்டது. கரூருக்கு போகும் போது அதிலும் பாதியா குறைந்து 41 பேரை காலியும் பண்ணிடுச்சு. அதுக்கு அப்புறம் காஞ்சிபுரத்தில் தட்டி கட்டி ஒரு கூட்டம் நடத்தினாங்க. அதில பாதி ஆகிவிட்டது. இப்போது சென்னையில் ஒரு கூட்டம் நடத்தினாங்க அதிலும் குறைஞ்சு போச்சு. இப்போது 3ம் ஆண்டு விழாவில் ஒரு 500 பேர் மட்டும் துண்டை சுற்றி கொண்டு கத்திக்கிட்டு இருந்தாங்க, அவங்களை மட்டும் பாத்துக்கிட்டு அவங்க தான் தமிழ்நாடு என்று விஜய் நினைத்துக் கொண்டிருக்கிறார். கழுத தேய்ந்து கட்டெறும்பாகி, அந்த கட்சி இருக்க இடம் தெரியாம போய் கடைசியா படம் நடிக்கவும் போய்விட்டார்.

கேள்வி: நாங்க தான் டாப் இன்ஜின் என சொல்லும் விஜய், வண்டி வாங்கிறதுக்கும், டீசல் போடுறதுக்கும் யார்கிட்ட காசு வாங்குவார் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: அதான், அந்த கட்சிக்கு இன்ஜினே இல்லை என்கிறேன். பின்ன யார்கிட்ட போய் டீசல் வாங்குறது? டாப் இன்ஜின் என்று அவரா சொல்லிகிட்டு இருக்கிறார். அந்த இன்ஜின் பாடி கட்டாதது. 5,6 ஸ்பேர் பார்ட்ச மொத்தமாக கட்டி தொங்க விட்டிருக்காங்க அவ்வளவு தான். செங்கோட்டையன் என்கிற ஒரு பழைய கார்புரேட்டர், அப்புறம் வெவ்வேறு கட்சிகளில் இருந்து வந்த ஒரு 5, 6 ஸ்பேர் பார்ட்ஸ்ச மொத்தமா சேர்த்து அதுக்கு மேல டீசல், பெட்ரோல ஊற்றி வெப்பப்படுத்தி ஓடுமா, ஓடாதா என்று பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். விலை உயர்ந்த ஓயிட் பெட்ரோல் போட்டா கூட அந்த இன்ஜின் ஓடாது.

கேள்வி: கரூரில் 41 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், கட்சி ஆண்டு விழாவில் விஜய் ஆட்டம் போடுவதை எப்படி பார்க்குறீர்கள்?
பதில்: சாவு வீட்ல பிணத்துக்கு முன்னாடி வெடி போட்டு ஆடிட்டு போவாய்ங்க.. அந்த கேட்டகிரியில் தான் இப்போ விஜய் இருக்கிறார். தன்னை பார்க்க வந்த 41 பேர் இறந்து போயிருக்காங்க, பிண ஊர்வலத்துல ஆடிட்டு போறவங்க எதுக்கு ஆடுறாங்கன்ணு அவங்களுக்கே தெரியாது. ஒரு பெரியவர் செத்துருக்காரு என்று கேட்டால், அதெல்லாம் ஆடனுமுல்ல… புதைக்கிற வரைக்கும் ஆடனுமுல்ல அண்ணே..அப்படிம்பாய்ங்க.. அந்த கேட்டகிரியில் தான் இப்ப விஜய் இருக்கிறார். அவர் டான்ஸ் ஆடின அந்த நிமிடத்தில் இருந்தே மக்கள் அனைவரும் அவரை ஒரு கோமாளியாகத் தான் பார்க்கிறார்கள். அரசியலுக்கு லாய்க்கு இல்லாத ஒரு கோமாளி.. இவர் எம்எல்ஏ ஆனா கூட சட்டமன்றத்தில் போய் கில்லி பாட்டு போட்டு டான்ஸ் ஆடிட்டு இருப்பாரே தவிர மக்கள் பிரச்னையை பற்றி பேச மாட்டார். அந்த கட்சியில் ஒரு உறுப்பினர் கூட சட்டமன்றத்துக்கு வர வாய்ப்பே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* பிளாக் டிக்கெட் விற்று விஜய்க்கு பணம் வந்ததா? சுத்தி வளைச்சு மூக்கை தொடும் மாஜி ஐஆர்எஸ்
கடலூரில் தமிழக வெற்றி கழகம் தேர்தல் அறிக்கை குழுவின் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் அளித்த பேட்டி:
விஜய் களத்திற்கு வரவில்லை என்று கூறுகிறார்கள். பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணி குறித்து விஜய் உரிய நேரத்தில் முடிவு எடுப்பார். கூட்டணிக்கு யார் வந்தாலும் வராவிட்டாலும் தமிழக வெற்றி கழகம் தனித்து ஆட்சியைப் பிடிக்கும். பாஜக அழுத்தம் கொடுப்பதாக சொல்கிறார்கள். விஜய் அழுத்தத்திற்கு அடிபணிகிற ஆளா? இந்தத் தேர்தல் திமுகவிற்கும் தமிழக வெற்றிக்கழகத்திற்கும் இடையே தான். பிளாக்கில் டிக்கெட் விற்று விஜய்க்கு பணம் வந்தது என காலம் காலமாக சொல்கிறார்கள். பிளாக்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பதற்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம். அதை தடுக்க வேண்டியது யார்? காவல்துறை என்ன செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

* என்னாது.. பட்ஜெட் பற்றி கருத்தா.. மூச்..!
ஒன்றிய பட்ஜெட் பத்தியெல்லாம் எங்ககிட்ட ஏன் கருத்து கேட்கிறீங்க. நாங்க புதுசா ஆரம்பிச்ச கட்சி. இதை வலிமையாக்கனும், தமிழ்நாட்ல ஆட்சியைப் பிடிக்கனும்.. அதுக்கு அப்புறம்தான் நாங்க கருத்து எல்லாம் சொல்ல முடியும்.
-தவெக நிர்வாகி செங்கோட்டையன் கருத்து

Related Stories: