இறந்தவர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து நில அபகரிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

தாம்பரம், ஜன.24: இறந்தவர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் அடுத்த நன்மங்கலம் பகுதியில் யசோதா என்பவருக்கு சொந்தமான 2,880 சதுர அடி நிலம் உள்ளது. யசோதா இறந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சாம்பசிவம் என்பவர், யசோதா உயிருடன் இருப்பது போல் ஒரு நபரை வைத்து ஆள்மாறாட்டம் செய்து, அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து, தனது மருமகனின் நண்பரான சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு பொது அதிகாரம் வழங்கி, பின்னர் அந்த நிலத்தை தனது மனைவி பெயருக்கு கிரைய ஆவணமாக பதிவு செய்து அனுபவித்து வந்தார்.

இதுபற்றி அறிந்த யசோதாவின் மகன் வெங்கடேஸ்வரன், தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டதன் பேரில் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து நன்மங்கலம் பகுதியை சேர்ந்த சாம்பசிவம் (74), சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (38) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட மூலப்பத்திரம், ராமச்சந்திரன் என்பவருக்கு வழங்கிய போலி பவர் ஆவணம் மற்றும் போலி கிரையப் பத்திரைத்தை பறிமுதல் செய்து கைது, செய்யப்பட்ட இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Related Stories: