லண்டன்: மகளிருக்கான ஃபிபா சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்சனல் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது. ஆறு கண்டங்களை சேர்ந்த மகளிர் கால்பந்து சாம்பியன் அணிகள் பங்கேற்ற ஃபிபா சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டிகள் லண்டனில் உள்ள எமிரேட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்து வந்தன. இதன் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஆர்சனல் அணியும், பிரேசிலின் முன்னணி அணியான கோரிந்தியன்ஸ் அணியும் மோதின. போட்டியின் துவக்கம் முதல் சிறப்பாக ஆடிய ஆர்சனல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒரு கட்டத்தில் முன்னிலை வகித்து வெற்றி பெறும் சூழல் காணப்பட்டது.
ஆனால், 96வது நிமிடத்தில் கோரிந்தியன்ஸ் அணியின் அல்புகர்க் அடித்த கோலால் போட்டி சமனுக்கு வந்தது. அதன் பின் கூடுதல் நேரம் தரப்பட்டு போட்டி நடந்தது. அதில் ஆர்சனல் அணியின் கேட்லின் ஃபூர்ட் அட்டகாசமாக கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அதன் பின் கோல் எதுவும் விழாததால், 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் அணி வெற்றி வாகை சூடி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. முதன் முதலாக நடத்தப்படும் இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சனல் அணிக்கு ரூ. 21 கோடி பரிசு வழங்கப்பட்டது.
