கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

*முருங்கை இலையை சுலபமாக கிள்ள ஈரமான துணியில் இலைகளோடு அழுத்தமாக கட்டி இரவு முழுக்க வைத்து காலையில் பிரித்தால் இலைகள் சுலபமாக உதிர்ந்து விடும்.

*தேன்குழல் முறுக்கு, சீடைக்கான மாவை வெந்நீர் ஊற்றி பிசைந்தால் மொறு மொறு என்றிருக்கும்.

*சுக்கா ரொட்டி செய்த தோசைக் கல்லில் தோசை வார்த்தால் எடுக்க வராது. கடைசியாக ரொட்டி சுட்டவுடன் கல்லில் எண்ணெயை தடவி வைத்துவிட வேண்டும்.

– எஸ்.வசந்தி, தஞ்சாவூர்.

*முள்ளங்கியை தோல் சீவி, துருவி உப்பு கலந்து வைத்தால் தண்ணீர் தனியே வந்து விடும். அதை பிழிந்து தயிரில் சேர்த்து பச்சை மிளகாய், கடுகு,தேங்காய் அரைத்து, கொஞ்சம் கொத்தமல்லி நறுக்கிப் போட்டால் முள்ளங்கி பச்சடி தயார்.

*முள்ளங்கி, கேரட், உருளைக்கிழங்கு, வெள்ளரி மூன்றையும் துருவி உப்பு, வெங்காயம் கலந்து சாலட்டாக சாப்பிடலாம்.

– ராஜேஸ்வரி, சென்னை.

*தேவையான அளவு ஜவ்வரிசியுடன் கொஞ்சம் கறிவேப்பிலையும் ேசர்த்து, எண்ணெயில் வறுத்தெடுக்கவும். இதில் உப்பு, மிளகாய் தூள் கலந்தால் ஜவ்வரிசி காராபூந்தி ரெடி. திடீர்
விருந்தாளிக்கு இது பயன்படும்.

*தேங்காயை உடைக்காமல் ஃப்ரீசரில் வைத்தால் தேங்காய் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

*புளிக்காய்ச்சல் செய்யும் போது, புளி கொதிக்கும் போது வெள்ளை சென்னாவை வேகவைத்து வேர்க்கடலைக்கு பதிலாக அதனுடன் சேர்த்தால் சுவை தூக்கலாக இருக்கும்.

– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

* தோசை முறுவலாக இருக்க வறுத்த ஜவ்வரிசி கொஞ்சம் சேர்த்து மாவு அரைத்தால் மொறுமொறுவென இருக்கும்.

* பாகற்காய் சமைக்கும் போது அதிக கசப்பு தன்மை நீங்க அரிசி களைந்த நீரில் வேகவைத்து சமைத்தால் கசப்பு கொஞ்சம் குறையும்.

* வடாம் செய்யும் போது கொஞ்சம் பால் சேர்த்து வடாம் கூழ் காய்ச்சினால் வெண்மை நிறமாக இருக்கும்.

– கோ.ரம்யாஸ்ரீ , கிருஷ்ணகிரி.

* கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.

* காலிஃப்ளவர் சமைக்கும் போது ஒரு துளி பால் சேர்த்தால் பூப்போன்ற வெள்ளை நிறம் மாறாமல் இருக்கும்.

* தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க வேண்டும் என்றால் இஞ்சியை தோல் சீவி தட்டி தயிரில் போட்டால் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கும்.

* குளோப் ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன்விட்டு இறக்கினால், பாகு உறையாமலும், கெட்டுப்போகாமல் இருப்பதுடன் சுவையும் கூடுதலாக இருக்கும்.

– புனிதவதி, கோவை.

* காய்ந்து போன பிரெட் ஸ்லைஸ்களை இட்லி பாத்திரத்தில் ஆவியில் சில நிமிடங்கள் வைத்து எடுத்தால் ஃப்ரெஷ்ஷாகிவிடும்.

* இட்லி மிகவும் மிருதுவாக இருக்க வேண்டும் என்றால் உளுத்தம் பருப்பை மிகவும் வழுவழுப்பாகவும், அரிசியை நன்றாகவும் ஆட்ட வேண்டும். இரவில் உப்பு போட்டு நன்றாக கலந்து விடவும்.

– அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

* முட்டை ஆம்லெட் போடும் போது சிறிது பால் கலந்து ஊற்றினால் ஆம்லெட் சுவையாக இருக்கும்.

* தயிர் வடை செய்யும்போது வடையை பொரித்ததும், சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.

* கட்லெட் செய்ய ரொட்டித் துண்டு இல்லையெனில் அரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.

* தோசை மாவுடன் சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால் தோசையின் சுவை சூப்பராக இருக்கும்.

– வேல் அரவிந்த், திண்டுக்கல்.

* பழுக்காத தக்காளிகளுடன் ஒரு பழுத்த தக்காளியை போட்டு வைத்தால் மற்ற தக்காளிகளும் பழுத்து விடும்.

*அடை செய்யும் போது ஒரு கப் கேரட் துருவலை சேர்த்தால் அதன் ருசியே தனிதான்.

– எஸ்.விமலா சடையப்பன், திண்டுக்கல்.

Related Stories: