அப்பத்தா’ஸ் அடுப்படி

நன்றி குங்குமம் தோழி

அப்பத்தா’ஸ் அடுப்படி எனும் பெயருக்கு ஏற்றார்போல் ப்ரீத்தியின் தொழில் சிந்தனை அவர்கள் வீட்டு அடுப்படியிலிருந்தே தொடங்கியிருக்கிறது. நாம் வெளியில் சென்று எவ்வளவு வகையான உணவுகளை உண்டாலும், வீட்டில் செய்து உண்ணும் ஸ்பெஷல் பலகாரங்கள் மற்றும் பாரம்பரியமான உணவுகளுக்கு தனி ருசி இருக்கும். பதினொரு வருடங்களாக தங்களுக்கு தெரிந்த மக்கள் வட்டங்களுக்குள்ளே பாரம்பரியமான உணவு சேவையை ப்ரீத்தியின் குடும்பத்தினர் வழங்கி வந்த நிலையில் தன் அப்பத்தாவின் கைமணத்தை ‘அப்பத் தா’ஸ் அடுப்படி’ எனும் பிராண்டாக உருவாக்கியிருக்கிறார் ப்ரீத்தி.

“செட்டிநாடு பகுதியிலுள்ள ஊர்களுக்குமான பெயர் காரணம் எனக்கு மிகவும் பிடிக்கும். உதாரணமாக காரைக்குடி அருகே கொத்தமங்கலம் என்பது எங்க ஊர். கொத்து கொத்தாக மங்கலங்கள் நிறைந்திருக்கும் ஊர் கொத்தமங்கலம் என்பார்கள். அதே போல அப்பத்தா’ஸ் அடுப்படி என்பதற்கு தமிழ் மீதுள்ள ஆர்வமும் அப்பத்தா மீதான காதலும்தான் பிராண்டின் பெயர்க்காரணம். சொந்த ஊர் காரைக்குடி என்றாலும் சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வருகிறோம்.

எங்க வீட்டில் அரைக்கும் இட்லி மாவு, நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்களுக்கு மிகவும் பிடிக்கும். இட்லி மல்லிப்பூ போல இருக்கிறது என்பார்கள். சிலர் எங்களிடம் இட்லி மாவு அரைத்து தரும்படி கேட்கவே, வீட்டில் இருந்தபடியே சிறிய அளவில் தெரிந்தவர்களுக்காக இட்லி மாவு அரைத்து கொடுத்தோம். இது அப்படியே தொடர்ந்து சிறிய அளவில் நடைபெறும் வீட்டு விசேஷங்களுக்கு, பேச்சுலர்களுக்கு, தனியாக வசிக்கும் வயதானவர்களுக்கு குறிப்பிட்ட காலங்களுக்கு சமைப்பது, காரைக்குடி ஸ்பெஷல் பலகாரங்கள் செய்வது என ஒரு கேட்டரிங் சேவையாக மாறியது. ஆனால், இது பெரிதளவில் வெளியில் தெரியாது. வாய் வழி வார்த்தையாக மட்டுமே இது பரவியிருந்தது. பதினொரு ஆண்டுகளாக ஒரு கிளவுட் கிச்சன் போல எங்க வீட்டில் செய்து கொண்டிருந்தார்கள்.

கொரோனா காலக்கட்டத்தில்தான் ஏன் இதை ஒரு பிராண்டாக உருவாக்கக்கூடாது என்று தோன்றியது. ஆனால், வீட்டில் கொஞ்சம் தயங்கினர். ஒரு சிறிய முயற்சியாக இதை செய்யலாம் என்று முதலில் சமூக வலைத்தளம் மூலம் மார்க்கெட்டிங் செய்ய தொடங்கினேன். அடிப்படையில் நான் ஒரு கட்டிடக்கலைஞர். ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய பின்னர், சென்னையில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்துவிட்டேன்.

எனவே, காலை நேரத்தில் கல்லூரிக்குச் செல்வது, அது முடிந்து வீட்டிற்கு வந்ததும் ஆர்டர்கள் எடுப்பது, மார்க்கெட்டிங் செய்வது என இருந்தேன். என் வீட்டில் அம்மா, அப்பா, என் மாமியார், மாமனார், என் அப்பத்தா, என் கணவரின் அப்பத்தா என எல்லோருக்கும் சேர்த்துதான் உணவுகளை சமைப்பார்கள். என் கணவர் ஐ.டி ஊழியர் என்றாலும் எங்க நிறுவனத்தின் டெலிவரி மேனேஜர் அவர்தான். எங்க அப்பத்தா இருவரின் கைமணத்தில் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாங்க உணவுகளை தயாரிக்கிறோம். பாரம்பரியமான உணவுத் தயாரிப்பில் சில RnD செய்து எங்க சீக்ரெட் ரெசிபிக்களை சேர்த்து பிரண்டை பொடி, தொக்கு வகைகள் போன்ற புது தயாரிப்புகளை கொண்டு வந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா ஊரடங்கு காலத்தை தொழில் தொடக்கமாக பயன்படுத்திக் கொண்டோம்” என்றவர் தங்கள் பிராண்ட் வளர்ச்சி குறித்து பகிர்கிறார்.

“எங்க தயாரிப்புகள் அனைத்தும் மைதா மற்றும் பதப்படுத்திகள் சேர்க்கப்படாத உணவுப் பொருட்களாக இருக்க வேண்டும் என்பதில் நாங்க உறுதியாக இருக்கிறோம். ஏனெனில் இப்போது ஹோட்டல் உணவுகள் வழக்கமானதாகவும், வீட்டுச் சாப்பாடு அரிதாகவும் மாறிவிட்டது. எங்க தயாரிப்புகளில் பதப்படுத்திகள் சேர்க்காததால் சேகரித்து வைக்கும் காலம் நான்கு மாதங்கள் மட்டுமே என்று குறிப்பிடுகிறோம். அதையும் மீறி ஆறு மாதங்கள் வரை நன்றாக இருப்பதாக சில வாடிக்கையாளர்கள் சொல்வார்கள்.

தொக்கு வகைகள், வற்றல் வகைகள், கை சுத்தல் முறுக்கு, மாப்பிளை முறுக்கு, தேன்குழல் முறுக்கு, கந்தரப்பம், ஆடி கும்மாயம் போன்ற பலகாரங்கள் எங்களின் சிக்னேச்சர் உணவுகள். அதில் சீம்பால் ஸ்வீட்தான் இன்னும் ஸ்பெஷல். மாடு குட்டி ஈன்ற பின் கரக்கும் முதல் பாலான சீம்பாலினை நேரடியாக சாப்பிடுவதை விட, கருப்பட்டி சேர்த்து அதை ஸ்வீட்டாக புது தயாரிப்பை கொண்டு வந்தோம். டயாபட்டீஸ் உள்ளவர்கள், பாலூட்டும் தாய்மார்களும் இதனை உண்ணலாம்.

கருப்பு கவுனி அரிசி ஸ்வீட், மில்க் மெய்ட் சேர்க்காத இளநீர் பாயசம், ரோஜா இதழ்கள் மற்றும் நன்னாரி வேரிலிருந்து சாறு எடுத்து பாகு காய்த்து தயாரிக்கப்படும் ரோஸ் மில்க், நன்னாரி சர்பத் மற்றும் எங்களின் ஸ்பெஷல் பானகம் எங்க தயாரிப்புகளில் தனித்துவமானவை. இதுமட்டுமின்றி கல்லூரி மாணவர்கள், பேச்சுலர்ஸ்கள் சிலருக்கு காலை, மதியம், இரவு உணவுகள் தயாரிக்கப்பட்டு சந்தா முறையில் வழங்கி வருகிறோம்.

சிறிய அளவில் நடைபெறும் திருமணம், சீமந்தம் போன்ற வீட்டு விசேஷங்களுக்கு உணவு சமைத்து தருகிறோம். இது போன்ற அதிக அளவிலான ஆர்டர்கள் எடுக்கும் போது மட்டும் உதவிக்கு ஆட்களை வைத்துக் கொள்வோம். மற்ற நேரங்களில் எங்க இரண்டு அப்பத்தா உட்பட குடும்பத்தினர் அனைவரும் சேர்த்துதான் எல்லா வேலைகளையும் செய்வோம்” எனும் ப்ரீத்தி பாரம்பரியமான உணவுகளை தனித்துவமான முறைகளில் வழங்குவது மட்டுமின்றி, கட்டிடக் கலைத் துறை பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

“இது நான் விருப்பப்பட்டு உருவாக்கிய பிராண்ட். இதை தொடங்கும் போதே நான் பணியாற்றிக் கொண்டிருந்ததால் பகுதி நேரமாக இரண்டையும் மேலாண்மை செய்து வந்தேன். நான் படித்ததும், பணிபுரிவதும் வேறு துறை என்றாலும் எங்க அப்பத்தாவின் கைமணத்தில் உருவாகும் உணவுகள் மீதான காதல் குறையவில்லை. எனவே, வேலையில் இருந்து வந்த உடனே எங்க பிராண்ட் மார்க்கெட்டிங் வேலையை சமூக வலைத்தளத்தில் பதிவிடத் தொடங்கிடுவேன்.

அதைப் பார்த்துதான் பலரும் வாங்க ஆரம்பித்தார்கள். எனவே, வீட்டை தாண்டி வெளியே ஒரு கடை வைக்கலாம் என்று யோசித்ததும், வளசரவாக்கம் பகுதியில் ஒரு சின்ன கடை வைத்திருந்தோம். கடைக்கு வரும் மக்கள் உணவுகளை ரசித்து சாப்பிட்டு பாராட்டினாலும், எங்க கடை தெருவில் உள்ளடக்கமாக இருப்பதால் அதிகப்படியான மக்கள் கூட்டத்தை எதிர்பார்க்க முடியவில்லை. மனம் தளராமல் மக்கள் புழக்கம் அதிகமிருக்கும் இடத்திற்கு மாற்றலாமென்று, கடையை போரூரில் உள்ள மெட்ராஸ் ஃபுட் வாக் எனும் இடத்தில் ஒரு அவுட்லெட்டாக அமைத்தோம். இப்போது அங்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குழந்தைகள் அவர்களுக்கேற்ற உணவுகளை கேட்டு உண்ணும் போது பெரியவர்களும் வயதானவர்களும் விரும்பும்படியான உணவுகளும் இங்கு கிடைக்கும்.

வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் சில ஸ்பெஷல் காம்போஸ் கிடைக்கும். வெள்ளை பணியாரம், கந்தரப்பம், முடக்கத்தான் சூப், பருத்திப் பால், நன்னாரி சர்பத் அடங்கிய ஒரு காம்போ ரூ.149 மட்டும்தான்.இவ்வளவு மலிவான விலைக்கு எப்படி இத்தனை ஐட்டம்ஸ் தர முடிகிறது என கேட்பார்கள். ஃபுட் கோர்ட்களிலும் ஆரோக்கியமான உணவுகள் குறைவான விலையில் கிடைக்கும் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம்.

சிறுவயதில் நூடுல்ஸ் வேண்டுமென்று நான் அடம் பிடித்த போது, வீட்டில் யாரும் செய்து தரவில்லை. என் அப்பத்தாதான் மைதாவிற்கு பதில் அரிசி மாவில் ஆரோக்கியமான நூடுல்ஸ் செய்து கொடுத்தார். இதுதான் எங்க பிராண்டின் ‘நல்ல நூடுல்ஸ்’ கதை. எங்க கடையை பார்க்கும் பெண்கள் சிலர் ‘எங்களுக்கும் இது போன்று தெரிந்ததை, பிடித்ததை செய்ய வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது. ஆனால், நேரமில்லை’ என்கிறார்கள். உங்களிடம் ஒரு நல்ல யோசனை இருந்து அதற்காக உண்மையாக உழைக்க தயாரானால் அதற்கான நேரத்தை சரியாக மேலாண்மை செய்யலாம். நிச்சயமாக பெண்கள் தாங்கள் விரும்பியதை செய்ய முன்வர வேண்டும்” என்றார்.

செய்தி: ரம்யா ரங்கநாதன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்

Related Stories: