மொழி உறவுகள்

நன்றி குங்குமம் தோழி

இன்றைய காலகட்டத்தில், விலங்கினங்கள் கூட அன்பைப் பரிமாறிக் கொள்வதில் நம்மை மிஞ்சி விடுகின்றன. பூனைக்கும் நாய்க்கும் ஒத்துவராது என்று சொன்னார்கள். ஆனால், இன்று ஒரே வீட்டில் பூனை-நாய் இரண்டும் ஒன்றாக வளர்வதை காணலாம். அன்பினால் ஒரு எதிரியை கூட தன்வசப்படுத்த முடியும் என்பதையே இவை காட்டுகின்றன. ஆறறிவு படைத்த நாம் இதற்கு மேலும் ஒருபடி உயர்ந்தவர்களாயிற்றே!

அதிகாரத்தால் சாதிக்க முடியாதவற்றைக்கூட அன்பினால் சாதித்து விட முடியும். ரத்த பந்த உறவுகளிடம் ஏற்படும் பாச-பந்தம் அன்பாகிறது. உறவுகளின் நெருக்கம் வாழ்க்கையின் பலமாக அமைகிறது. ஒன்றுவிட்ட உறவுகள், தூரத்து உறவுகள் அனைத்தும் நமக்கு உறுதுணையாக அமைந்து வாழ்க்கையை நடத்திச் செல்ல தூண்டுகோல்களாக அமைகின்றன. அன்பு, அகிம்சையின் ஆயுதம். வாழ்க்கையில் நிறைய வசதிகள் பெற பணம் சம்பாதிக்க பாடுபட வேண்டும். ஆனால், அன்பினால் எத்தனையோ மனிதர்களை சம்பாதித்து விடலாம். பணம் வந்து போகும்.

அன்பினால் கிடைக்கும் உறவுகள் என்றுமே நம்மை விட்டுப் போகாது. அதிலும் மொழி உறவுகள் நிறைய உடன் பிறப்புக்களை நமக்கு அறிமுகப்படுத்தும். செல்லும் இடங்களிலெல்லாம் நம் மொழி பேசும் மக்களை உறவுகளாக்கிக் கொள்ள முடியும். அத்தகைய மொழி உறவுகள் என்றும் நம்முடன் பயணிப்பார்கள். நல்லது-கெட்டதுகளில் பங்கெடுப்பார்கள்.

உறவுகள், பிறப்பிலேயே நமக்கு இந்தப் பிரபஞ்சத்தால் ஏற்படுத்தப்பட்டது. மொழி உறவுகள் நாம் செல்லுமிடங்களில், நம் தாய் மொழி பேசுபவருடன் அன்பாகப் பழகி, நெருக்கத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் உறவாக ஏற்படுத்திக் கொள்வதாகும். அத்தகைய உறவுகள் நமக்கு சமூகத்தில் பெருமையை தேடித் தரும். உறவுகள் சொந்தத்தில் குறைவாக இருந்தாலும், மொழி மூலம் நிறைய உறவுகளை பெருக்கிக் கொள்ள முடியும். நம் மொழி பேசுபவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை உறவுகளாக மாற்றிக்கொள்ள முடியும்.

இன்று கூட்டுக் குடும்பங்கள் மறைந்துவிட்டன. உடல் மற்றும் பண பலம் இருக்கும் வரை தன்னம்பிக்கை என்னும் ஆயுதம் தனிக்குடித்தனங்களில் கை கொடுக்கும். நன்கு வாழ்ந்த ஒரு குடும்பம். அண்ணன் விவசாயி. தன் தம்பியை நன்கு படிக்க வைத்தான். அவனுக்கு வேலையும் கிடைத்தது. திருமணமும் செய்து வைத்தார்கள். குழந்தைகள் என குடும்பம் வளர்ந்தது. அண்ணனுக்கு அந்தாண்டு விவசாயம் கை தரவில்லை. சேமிப்புகள் கரைந்தது. அந்த சமயத்தில் தம்பி கை கொடுத்தான். அனைத்து விதங்களிலும் உதவினான். குடும்பம் ஒன்றாக இருந்ததால் சாத்தியமாயிற்று. தனித்தனியாக அண்ணன், தம்பிகள் வசிக்கும் இக்காலத்தில் சாத்தியப்படுமா என்ன?

வாழ்க்கையில் என்றாவது கஷ்டங்கள் ஏற்பட்டால் உதவவும், சுக-துக்கங்களை பகிர்ந்து கொள்வதற்காகவும்தான் குடும்பங்கள் கூட்டாக இருந்தன. நூறில் எங்கேயோ ஒன்றிரண்டு குடும்பங்கள்தான் இப்பொழுது ஒன்றாக வசிக்கிறார்கள். இத்தகைய உறவு முறைகள் காணாமல் போய்விட்ட இக்காலத்தில், நெருக்கத்தை ஏற்படுத்தி பாச உணர்வைத் தருகிறது மொழி உறவுகள். எங்கு சென்றாலும் நம் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் கூட நம்மை உறவுகளாக மாற்றி விடுகிறது.

ஒரு அலுவலக நிமித்தம், எகிப்து செல்ல வேண்டியிருந்தது. அங்கு அவர் சாப்பிடக்கூடிய உணவுகள் கிடைக்கவில்லை. அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை சந்தித்துள்ளார். இருவரும் கைகுலுக்க, பேச்சு வார்த்தை தொடங்கி, வீட்டுக்கு அழைத்துப் போய், வேண்டியதெல்லாம் உதவியிருக்கிறார். அவர் நாடு திரும்பும் வரை வேண்டிய வசதிகளை செய்து கொடுத்துள்ளார். தமிழ்நாடு வந்தால் இவரை சந்திக்காமல் போகவே மாட்டாராம். மொழி உறவாக மாறியுள்ளது. பணம் பாதாளம் வரை செல்லும் என்றாலும், நம் மொழி பாதாளத்துக்குச் செல்பவனைக்கூட காப்பாற்றியுள்ளது.

இன்று நம் மொழி பேசும் மக்கள் உலகம் முழுவதும் வியாபித்துள்ளார்கள். தெரியாத இடங்களுக்குப் ேபானாலும் ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டு நமக்குத் தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். மேற்கல்விக்கு வெளிநாடு செல்லும் பிள்ளைகள் இப்படித்தான் தங்கள் உறவை வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் புதிய மாணவர்களை தங்களுடன் வந்து தங்கும் படி அழைப்பு விடுக்கிறார்கள். பழகிய பின் தனக்கென அறை எடுத்துக் கொள்கிறார்கள். வசதி வந்தவுடன் தங்கள் பொருட்களைக்கூட புதிய மாணவர்களுக்கு தந்து செல்கிறார்கள். நம் மக்களையும், குடும்பத்தையும் விட்டுச் சென்றாலும் புதிய உறவுகள் கிடைத்து சமாளித்துக் கொள்கிறார்கள். நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் இவர்களை உறவாக்குகிறது.

இன்றைய காலகட்டத்தில் எல்லா வீடுகளிலும் ஒன்றோ, இரண்டோதான் பிள்ளைகள் இருக்கிறார்கள். அன்றைய காலகட்டம் போல் அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை உறவுகளே இல்லாமல் போய்விடுமோ என்கிற பயம் தலைதூக்குகிறது. பிள்ளைகள் நிறைய இருந்தால்தானே சந்ததிகள் உருவாகும். இருக்கும் பிள்ளைகளும் தனித்தனியாக வளர்வதால் உறவுமுறை குறுகிய வட்டத்துள் அடங்கி விடுகிறது. ஒன்றுவிட்ட உறவுகளும், தூரத்து உறவுகளும் கூட உதவிக்கு ஓடிவந்து குடும்ப கௌரவத்தை காப்பாற்றினார்கள். உடன் பிறப்புகள் இல்லாதவர்கள் நண்பர்களை இணைத்துக் கொள்கிறார்கள். உறவுகள் போன்று அவர்கள்தான் பயணப்படுகிறார்கள்.

அதில் ஒரே ஊர், ஒரே மொழி பேசுபவர்கள் என்றிருந்தால் நம்மால் ஏற்படுத்திக் கொள்ளும் உறவாகவே அமைந்து விடுகிறது. அப்படியாக அமையும் காலத்தின் உறவுகள் தங்கள் சந்ததிகளையும் அதே போல் வளர்க்கிறார்கள். இரண்டு பேர் இருக்கும் வீடுகளில் ஒருவர் புதிய விருந்தாளியாக இருந்தாலும், எப்படி சமாளிப்பது என்று பலர் திணறுகிறார்கள். அதிலும் முன்கூட்டியே அறிவித்துவிட்டு, நேரம்-காலம் பார்த்துக் கொண்டு போக வேண்டியுள்ளது.

விட்டுக் கொடுக்கும் தன்மையும், பிறரை அனுசரித்துச் செல்லும் தன்மையும் இருந்தால் மட்டுமே கூட்டாக வாழ இயலும். அதே சமயம் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர்கள் யாருடனும் ஒத்துப் போய் விடுவார்கள். தனிமையில் வளரும் பிள்ளைகள் கூச்சப்பட்டு, கஷ்டங்களை எதிர்கொள்ள சிரமப்படுகிறார்கள். உறவுகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் சவால்களை எதிர்கொள்ள முடியும். மனதில் உள்ளதை பகிர கண்டிப்பாக துணை வேண்டும். அவை ஏன் நம் உறவுகளாக இருக்கக் கூடாது.

ஒரு பக்கம் பிறந்த மண்ணிலே உறவுகளை தொலைத்துக் கொண்டிருக்கிேறாம். மற்றொரு பக்கம் மொழி நம் மக்களை உறவாக்கிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் சுற்றி விட்டு, பல்வேறுபட்ட மனிதர்களை சந்தித்துவிட்டு, அயல் நாட்டு மொழிகளை நாமும் கற்றுக் கொண்டு மீண்டும் நம் தாய் மொழி பேசுபவரைக் கண்டால் ஒரு ஆனந்தம் கிடைக்குமே அதற்கு ஈடு இணையே கிடையாது. நம் நாடு, நம் மண், நம் மொழி என்று நினைக்கும் பெருமிதம்தான் மொழியின் சக்தி.

நட்புணர்வு என்பது இனம், மதம், நிறம் பார்த்து வருவதில்லை. தாய் மொழிப் பேசுபவர்களிடையே தானே பாசம் ஏற்பட்டுவிடும். அந்தப் பாசமே பின் உறவாக மாறும். நம்மைச் சுற்றி அன்பான மனிதர்களும், ஆனந்தமான சூழலும், இனிய மலர்ந்த முகங்களும் தெரிந்தால் போதும். இத்தகைய விஷயங்களை இன்றைய பிள்ளைகளுக்கு எடுத்துரைப்போம். புத்தகத்தில் எழுதப்படாத உறவு முறைகளை குடும்பத்தில் எடுத்துரைப்போம். பிள்ளைகள் தனித்து வளராமல் இருக்க நாம் கூட்டாக உறவின் பெருமைகளை உலகுக்கு எடுத்துரைப்போம். நாளைய சமூகம் உறவுகளோடு கூடி வாழ வழிவகுப்போம்.

(முற்றும்!)

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாசன்

Related Stories: