கை கொடுத்த கல்வி!

நன்றி குங்குமம் தோழி

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் இந்துமதி. இவரின் பூர்வீகம் திருப்பதி. இவரின் அப்பா சாதாரண லாரி டிரைவர். தனது முதல் முயற்சியிலேயே இந்திய பொறியியல் சேவை (Indian Engineering Services) தேர்வில் அகில இந்திய அளவில் 75வது இடத்தைப் பிடித்து தேர்ச்சிப் பெற்றுள்ளார். இந்துமதியின் இந்த வெற்றி அவரது குடும்பத்திற்கும் பெருமையை தேடித் தந்துள்ளது.  ஒழுக்கமான மாணவருக்கும், குரு பக்தியுள்ள மாணவருக்கும் ஒரு உதாரணமாக இந்துமதி உயர்ந்து நிற்கிறார்.

ஆசிரியர்-மாணவர் உறவு சீர்குலைந்து வரும் இன்றைய கல்வி சூழ்நிலையில் அவர்கள் இருவரின் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்துமதி முன்மாதிரியாக திகழ்கிறார். இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மாணவியா என்று திகைக்க வைக்கிறார். இவரைப் போல் சாதாரண குடும்பத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் காணும் கனவுகள், கல்வி மூலம் மெய்ப்படும் என்பது இந்துமதியால் நிரூபணமாகி உள்ளது.

“என் வாழ்நாள் முழுவதும் தினசரி உணவுக்காக போராடுவதற்கே நேரம் சரியாக இருந்தது. என் மகளின் இந்த வெற்றியால், எங்கள் துன்பங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டதாக எனது குடும்பமே உணர்கிறது’’ என்று இந்துமதியின் தந்தை நெகிழ்ந்தார்.

இந்துமதியின் தாயோ, “இந்துவிற்கு எதிர்காலத்தில் நம்பிக்கை கொடுத்து வந்தோம். என்ன வேண்டுமானாலும் படி. செலவு பற்றி கவலைப்படாதே. ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உருவாகும்’’ என்ற தைரியத்தைக் கொடுத்து வளர்த்தோம். வாழ்க்கையில் நம்பிக்கையைத் தவிர வேறு எதையும் எங்களால் இந்துவுக்குக் கொடுக்க முடியவில்லை. கடவுள் எங்களின் நம்பிக்கையை காப்பாற்றி விட்டார்’’ என்று ஆனந்தக் கண்ணீருடன் பூரிக்கிறார்.

‘‘எனது பள்ளி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் வழிகாட்டலில்தான் நான் திருப்பதியில் இயங்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு தேர்வானதும்,  குண்டூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் B.Techக்கில் தங்கப்பதக்கம் பெற்று தேர்ச்சிப் பெற்றேன். அமெரிக்காவில், பாஸ்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் இருந்து ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஐ.டி நிறுவனத்தில் சேர அழைப்பு வந்தது. ஆனால், நான் அதில் சேர விரும்பவில்லை.

இந்தியாவில் பணிபுரியவே விரும்பினேன். அதனால் போட்டி தேர்வுகள் எழுதி தீர்மானித்தேன். எனது முடிவுக்கு பெற்றோர்களும் ஆதரவு மற்றும் ஊக்கம் கொடுத்தார்கள். IES தேர்வினை எழுதினேன். அதன் பிறகும் எந்த வேலையில் சேர்வது என்ற குழப்பம் இருந்தது. அப்போதும் எங்க வீட்டில் ஏதாவது ஒரு அரசு வேலையில் சேர்ந்தால் போதும் என்று சொல்லாமல் கவனமாக படி, படிப்பு என்றும் வீண் போகாது. என்ன நடந்தாலும் நாங்கள் உன்னுடன் இருப்போம்” என்று தைரியம் அளித்தார்கள்.

போட்டித் தேர்விற்கு தயார்படுத்திக் கொள்ள டெல்லிக்கு செல்ல வேண்டும் என்று விருப்பத்தை வெளிப்படுத்திய போது, என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோரும் படிப்பு கட்டணம் மற்றும் இதர செலவுக்காக பணம் கொடுத்து உதவினார்கள். இந்த உதவியை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வுக்கான முடிவுகளை அறிவித்த போது என்னுடைய கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்தது.

தேர்வு தர வரிசையில் 75வது இடத்தில் தேர்ச்சிப் பெற்றிருந்தேன். இன்று நான் இந்த நிலையை அடைந்ததற்கு எனது குருதான் முக்கிய காரணம். என் வாழ்க்கை எந்த திசையில் செல்லும் என்று நிச்சயம் இல்லாத போது அவர்தான் எனக்கான பாதையை காண்பித்தார். என் வாழ்நாள் முழுவதும் அவருக்கு கடன்பட்டுள்ளேன்’’ என்கிறார் இந்துமதி.

தொகுப்பு: கண்ணம்மா பாரதி

Related Stories: