மல்லர் கம்பம்!

நன்றி குங்குமம் தோழி

இன்றைக்கு டிஜிட்டல் சிமுலேஷன், விர்ஷுவல் ரியாலிட்டிகள் நிறைந்த உலகத்தில் வாழ்கிறோம். இந்தச் சூழலிலும், சாதாரண மரக்கம்பத்தை பயன்படுத்தி மனித அசைவுகளின் நுணுக்கங்களை, எதிரியின் உளவியலை புரிந்துகொள்ள முயற்சிக்கும் மல்லர் கம்பம் என்கிற பாரம்பரியக் கலை, எப்படி தன்னை புதுப்பித்து, காலத்துக்கு ஏற்ப மாற்றம் அடைந்து பயணிக்கிறது என்பதை, மல்லர் கம்பம் பயிற்சியாளர்களான டாக்டர் இராமச்சந்திரன் மற்றும் அவரின் இணையரான டாக்டர் சங்கீதா இராமச்சந்திரன் இருவருமாக விவரிக்க ஆரம்பித்தனர்.

‘‘அடிப்படையில் இது யோகா, ஜிம்னாஸ்டிக்ஸ், மல்யுத்தம் மூன்றையும் இணைத்து, செங்குத்தாக நிற்கும் கம்பத்தை மனிதனாய் உருவகப்படுத்தி செய்யும் கலை. கம்பத்தின் மேல்பகுதி இதில் தலை. நடுப்பகுதி கழுத்து. கீழ் பகுதி உடம்பு என நினைத்தே மல்யுத்த வீரர்கள், ஒவ்வொரு அசைவையும் செய்கிறார்கள். சுருக்கமாய் ஒரு மரக்கம்பத்தை, வெறும் பொருளாய் பார்க்காமல், சவாலான எதிரியாய் கருதி, உடலையும் மனதையும் செதுக்கும் உன்னதமான கலை என்கின்றனர் இருவரும்.

பண்டைய காலத்தில் ஆஜானுபாகுவாய் பலசாலிகளாக இருந்த வீரர்கள், தங்களுக்கு இணையாய் சண்டையிட ஆளில்லாத போது, தங்களைத் தயார்படுத்த, பாறைகளை எதிரியாய் நினைத்து அதில் பயிற்சி செய்தனர். காயங்கள் ஏற்படவே, இரும்பில் செய்த கம்பங்களுக்கு மாறி, காலப்போக்கில் இதுவும் மாற்றம் பெற்று, மரத்தாலான கம்பமாக மாறியிருக்கிறது.

இதிலும் மூன்று இருக்கிறது. முதலாவது மல்லர் கம்பம். இரண்டாவது மல்லர் கயிறு, மூன்றாவது தொங்கு கம்பம். எதிரி ஒருவரோடு சண்டையிடும் போது, எதிராளி அசைந்து கொண்டே இருப்பார் என்பதால், அந்த யதார்த்தத்தையும் பயிற்சியில் கொண்டுவர உருவானதே தொங்கு கம்பம். தொங்கு கம்பத்தில், உடலை சமநிலைப்படுத்தி வித்தைகள் செய்வது, பார்க்க ஆச்சரியம் ஊட்டினாலும், பயிற்சிகள் மூலம் கம்பத்தை வசப்படுத்தும் வீரர்களின் தோள்பட்டைகள், தொடைகள் மட்டுமின்றி, அவர்களின் விரல்களையும் வலுப்படுத்தவே மல்லர் கயிறு உருவானது. தொடக்கத்தில் இதிலும் மூங்கில் குச்சிகளைப் பயன்படுத்திய வீரர்கள், காலப்போக்கில் கயிற்றுக்கு மாறியிருக்கிறார்கள்.

18ம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் இந்தக் கலை பிரபலமாக இருந்ததற்கான பதிவுகள் இருந்தாலும், 8 முதல் 11ம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் மல்லர் கம்பம் இருந்ததற்கான ஆதாரங்கள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கல்வெட்டுகளில், சிற்பங்களுடன் ஆதாரமாய் உள்ளது. இந்த வரலாற்று உண்மையை பதிவுகளில் நாம் சரியாகக் கொண்டுவரவில்லை’’ என்கிறார் பயிற்சியாளர் இராமச்சந்திரன்.

‘‘தமிழ்நாட்டில் ஆயிரம் வருட வேர்களைக் கொண்ட இந்த பாரம்பரியக் கலை, இடையில் கொஞ்சம் பின்தங்கினாலும், தற்போது பெண்கள் உட்பட அனைவரையும் அரவணைத்து, நவீன விளையாட்டு வீரர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை உருவாக்கும் வீர விளையாட்டாய் ஜொலிக்கிறது.தமிழகத்தில் இது தோன்றிய இடம் விழுப்புரம் மாவட்டம். இங்குதான் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. 1960களில் இந்த விளையாட்டை தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ விளையாட்டாய் கொண்டுவர முயற்சித்தவர் ஆசான் உலகதுரை. அவருக்கு இப்போது 85 வயதானாலும், இவர்தான் எனக்கும் குரு’’ என்கிறார் இராமச்சந்திரன்.

‘‘மல்லர் கம்பம் விளையாட்டு சிற்பி ஒருவர் கல்லைச் செதுக்கிச் சிலையாக மாற்றுவதற்கு இணையானது. ஆரம்பத்தில் கடினமாய் தெரிந்தாலும், பயிற்சி மூலம் சுலபமாக்கலாம். இதில் உடலுக்கு பிட்னெஸ், பார்வையாளரை ஈர்க்கும் கலை மற்றும் போட்டி விளையாட்டு என்ற மூன்று முக்கிய பரிமாணங்கள் புதைந்திருக்கிறது. பிட்னெஸாய் பார்த்தால், தலை முதல் கால்வரை உள்ள தசைகளை வேலை செய்ய வைக்கிற முழு உடலுக்குமான பயிற்சி கிடைக்கும். பிட்னெஸுக்காக ஒரு நாளைக்கு 200 லாக் வரை வீரர்கள் அசால்டாகச் செய்வர்.

இதிலுள்ள நெக்லாக் பயிற்சி, உடலை பின் பக்கம் யு வடிவில் வளைத்து, கால்விரல் இரண்டால் எதிரி கழுத்தை கவ்விப் பிடிப்பது. இதில் உடலுக்கு வளைவுத் தன்மையும் வலிமையும் அதிகரிக்கும். கம்பத்தில் தலை கீழாகவும் அடிக்கடி தொங்குவதால், ரத்த ஓட்டம் தலைக்கும் சென்று, நினைவாற்றல் அதிகரிப்பு, கவனம் குவிப்பு போன்றவையும் மேம்படும்’’ என்கிறார்கள் இவர்கள்.

‘‘இதனை வெறும் கலையாகச் செய்பவர்கள் பாட்டில், கத்தி, நெருப்பு பந்தம், கரும்பு எனக் கிட்டத்தட்ட 20 முதல் 30 வகையான உபகரணங்களைக் கொண்டு கம்பத்தில் ஏறி சாகசம் புரிவர். மல்லர் கம்பம் போட்டி விளையாட்டாக பள்ளியில் தொடங்கி, தமிழ்நாடு டீமாக மாவட்டம், மாநிலம், தேசியம் என School Game Federation of India (SGFI) மூலமாக மாணவர்கள் விளையாடச் செல்கிறார்கள். இதில் வெல்பவர்களுக்கு 3 லட்சம் வரை பரிசுத் தொகைகளை தமிழக அரசு வழங்குகிறது. தேசிய அளவில் நடைபெறும் Khelo India Youth விளையாட்டிலும் மாணவர்கள் ஊக்கத் தொகை பெறுகிறார்கள்.

கல்லூரி மாணவர்களுக்கு, பல்கலைக் கழக அளவிலும், தேசிய அளவிலும் Khelo India University Game, Khelo India Beach Game போன்ற போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 5 லட்சம் வரை பரிசுத் தொகை உண்டு. ஒரு சிலருக்கு அரசு பணிகளும் கிடைத்திருக்கிறது. பெடரேஷன் வழியாக நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு Sport authority of India (SAOI) மாதம் 10 ஆயிரம் வீதம் ஓராண்டுக்கு நிதி வழங்குகிறது.

பாரம்பரியக் கலை ஒன்று விளையாட்டாக மாறி உலக அரங்கில் ஜொலிப்பது சாதாரண விஷயமில்லை’’ என்றவர்கள், ‘‘மல்லர் கம்பத்திற்கான உலகக் கோப்பை போட்டிகள் 2019 மற்றும் 2022ல் நடைபெற்றதில், துரோணாச்சார்யா விருதுகள் இரண்டும், அர்ஜூனா விருதுகள் இரண்டும் இந்திய மாணவர்களுக்கே கிடைத்தது. 18 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டிகளில், எனது பயிற்சி பள்ளியில் இருந்தும் மாணவி ஒருவரும், மாணவர் ஒருவரும் பங்கேற்று முதலிடத்திற்கு வந்தனர்’’ என்கிறார்கள் வெற்றி புன்னகையுடன்.

‘‘ஒரு கம்பத்தின் மேல் ஏறி நின்றாலே அனைவர் கவனத்தையும் ஈர்த்துவிட முடியும். அதிலும் கூடுதலாக, மற்றவர்களால் செய்ய முடியாத ஒன்றை, புவியீர்ப்புக்கு எதிராய் கம்பம் ஒன்றில் ஏறி நின்று நான் செய்கிறேன் என்கின்றபோது, இயல்பாகவே எல்லோரது கவனமும் குவியும். இது வீரர்களுக்கு தனித்துவமான அடையாளத்தைக் கொடுப்பதுடன், மற்றவர்களிடமிருந்து அவர்களைத் தனித்துக் காட்டுகிறது. இந்த உணர்வு பெரிய தன்னம்பிக்கையை வீரர்களுக்கு விதைக்கிறது. என்னால் இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையானது, விளையாட்டில் மட்டுமில்லை, வாழ்க்கையோட மற்ற எல்லா பகுதிகளுக்கும் உதவும்’’ என்றவாறு இருவரும் விடைபெற்றனர்.

மல்லர் கம்பத்தில் பெண்கள் குறித்து டாக்டர் சங்கீதா இராமச்சந்திரன்…

‘‘மல்லர் கம்பம் விளையாட்டு வீராங்கனையாக தமிழ்நாட்டுக்கு முதல் பதக்கத்தை ஜெயித்துக் கொடுத்தவள் நான். பிறகு பயிற்சியாளர், நடுவர் என பொறுப்புகளும் எனக்கு உயர்ந்தது. ஒரு பாரம்பரியக் கலையை உள்ளிருந்து அனுபவித்த பிறகு, அதையே வெளியில் இருந்து ஆராய்வது ஆழமான பார்வை என்பதால், ‘மல்லர் கம்பத்தில் பெண்களின் பங்களிப்பு’ குறித்த எனது பி.எச்.டி ஆய்வையும் முடித்தேன்.

ஆரம்பத்தில் பெண்கள் பெரும்பாலும் கயிறு வழியாக மட்டுமே செய்தனர். கம்பத்தில் ஏறிச் செய்வதற்கு, பெண்களின் உடல் அமைப்பு காரணமாய் சொல்லி மறுக்கப்பட்டது. இன்று அந்த எண்ணத்தையே உடைத்து, கடந்த 5 ஆண்டுகளாய் பெண்களும், கம்பத்தில் ஏறி சாகசம் புரிகிறார்கள்.

இந்த மாற்றம் வெறும் விளையாட்டு சம்பந்தப்பட்டது மட்டுமில்லை, பாரம்பரியமாக ஆண்களுக்கானது என முத்திரை குத்தப்பட்ட களத்தில் பெண்களும் தடம் பதிப்பதைக் காட்டுவது. எனது ஆய்வின்படி, பெண்களின் இடுப்பு எலும்பான பெல்விக் போன் இயற்கையிலே உறுதியானது. முறையான பயிற்சிகளால் கூடுதலாக பலப்படுத்தினால், பெண்களாலும் எந்தப் பிரச்னையும் வராமல் கம்பத்தில் ஏறி ஆண்கள் செய்கிற அத்தனை வித்தைகளையும் செய்ய முடியும் என்பதை ஆய்வில், அறிவியல் பூர்வமாய் நிரூபித்திருப்பதுடன், பெண்கள் மீது திணிக்கப்பட்ட தப்பான நம்பிக்கையையும் உடைத்திருக்கிறேன்.’’

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: கிருஷ்ணமூர்த்தி

Related Stories: