மன உறுதி, தன்னம்பிக்கை இருந்தால் எதையும் வெல்லலாம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘மதுரை மாவட்டம், செல்லூர்தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். அப்பா ஆட்டோ டிரைவர். நாங்க சாதாரணமான குடும்பம்தான். வீட்டில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் என் அம்மா, அப்பா அதை என்னிடமும் என் தம்பியிடமும் சொல்லமாட்டார்கள். கல்விதான் எங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்பதால் எங்களை பிரபல பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்கள்’’ என்று கூறும் சிவரஞ்சனி தற்போது பளு தூக்கும் வீராங்கனையாக பல பரிசுகள் மற்றும் விருதுகளை வென்றுள்ளார்.

‘‘கொரோனா காலத்தில் அப்பாவிற்கு வேலை இல்லாமல் போனது. அந்த சமயத்தில் வீட்டுக்கான செலவு எங்களின் படிப்பிற்கான செலவு என எல்லாம் ஒன்றாக சேர்ந்து வந்தது. அப்பாவின் சுமையை குறைக்க நான் அவரிடம் அரசுப் பள்ளியில் சேர்ந்து படிப்பதாக சொன்னேன். ஆனால், அவரோ நாங்க கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் மற்றதைப் பற்றி சிந்திக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். நாங்க ஒரு விஷயம் சிந்திக்கும் போதே அவர் அதனை செயல்படுத்தி விடுவார். அதைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்’’ என்று கூறும் சிவரஞ்சனி தற்போது மதுரையில் கல்லூரி ஒன்றில் இளங்கலையில் வணிகவியல் படித்து வருகிறார்.

‘‘எனது தனிப்பட்ட திறமையை வளர்த்துக் கொள்வதற்கு என் கல்லூரியின் பங்கு முக்கியமாக இருக்கிறது. கல்லூரியின் பயிற்சியாளர்கள் முனைவர் சாந்தமீனா, ஒலிம்பியன் சம்சுதீன் கபீர் இருவரும் எனக்கு ஒவ்வொரு கட்டத்திலும் உற்சாகமும், நம்பிக்கையும் அளித்து வருகின்றனர். பளுதூக்குதல் பயிற்சியினை நான் என் பள்ளி நாட்களில் இருந்தே எடுத்து வருகிறேன். முதலில் என் பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டியில்தான் பளுதூக்கும் விளையாட்டினை பார்த்தேன். அப்போதே, என் மனதில் அந்த விளையாட்டு மேல் தனிப்பட்ட ஈடுபாடு ஏற்பட்டது.

கண்டிப்பாக பளுதூக்குதலை கற்றுக் கொள்ள வேண்டும் என்று, எங்கள் உடற்கல்வி ஆசிரியர் காஞ்சனாவிடம் அந்த விளையாட்டு குறித்து கேட்டேன். நான் அவரிடம், ‘எனக்கு பளுதூக்குதல் விளையாட்டு மீது ஆர்வம் இருப்பதாகவும், அதனை கற்றுத் தரும்படி’ கேட்டேன். அவரும் மறுப்பு தெரிவிக்காமல், ‘இதில் எனக்கும் ஆர்வம் உள்ளது.

உடனே கற்றுத் தருகிறேன்’ என்று கூறினார். அடுத்த நாளே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டேன். தொடக்கத்தில் குறைவான எடையை தூக்கிப் பழகினேன். ஆனால், என்னோடு பயிற்சி பெற்றவர்கள் அதிக எடையினை தூக்குவதை கவனித்தேன். உடல் தகுதி, மன உறுதி, தன்னம்பிக்கை இருந்தால் அதிக எடைகளை தூக்க முடியும். அதனால் அதிக எடைகளை தூக்க முயற்சித்தேன். வெற்றியும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தேசிய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் நடைபெறும் பளுதூக்குதல் போட்டியில் பங்கு பெற ஆரம்பித்தேன்.

தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு சங்கம் சார்பில் 2022ல் நடைபெற்ற மாநில அளவிலான பளுதூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றேன். தமிழ்நாடு பளுதூக்குதல் சங்கம் சார்பில் 2024ல் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 63 கிலோ எடைப்பிரிவில் முதலிடம் பெற்றேன். 2022ல் நேபாளத்தின் பொக்ராவில் நடைபெற்ற 2வது இந்தோ-நேபாள் பளுதூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றேன்.

2024ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டியில் 71 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2024ல் மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான மணடல அளவிலான கல்லூரி மாணவிகளுக்கான போட்டியில் 76 கிலோ பளுதூக்குதலில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றேன். கடந்த 2025ல் தமிழ்நாடு அரசு சார்பில் தென்காசியில் நடைபெற்ற குற்றால சாரல் திருவிழாவில் 86 கிலோ எடைப் பிரிவுக்கான பளுதூக்குதல் போட்டியில் முதலிடம் பெற்றேன்’’ என்று கூறும் சிவரஞ்சனிக்கு சர்வதேச அளவில் மேலும் பல போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வெல்ல வேண்டும் என்று ஆசையாம்.

தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்

Related Stories: