நன்றி குங்குமம் தோழி
நம் தமிழர் பண்பாட்டில் இருந்து பிரிக்க முடியாத ஒரு இசை பறையிசை. போர் அறிவிப்பு, அரச நிகழ்வுகள், ஊர் சபை கூட்டங்கள், திருவிழாக்கள் என வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் பறையிசை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வந்துள்ளது. சமத்துவத்தின் குரலாக ஒலிக்கும் பறைஇசையை சாதி, மத, பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் ‘சமத்துவ பொங்கல்’ கொண்டாட்டத்தின் போது இசைத்து மகிழ்கிறோம். பொங்கல் விழாக்களின் கலை நிகழ்ச்சிகளில் தமிழர்களின் தொன்மையான பறையிசையும் பறையாட்டமும் நிச்சயம் இடம் பெறும். மக்களின் உணர்வுகளுடன் கலந்து தமிழன் என்ற எழுச்சியை தூண்டக்கூடிய பறையிசை நம் தமிழர் பண்பாட்டில் இரண்டற கலந்தது என்பதை விளக்குகிறார் பறையிசைக் கலைஞர் ஜோனா கலா.
“மனிதர்கள் வேட்டை சமூகமா இருந்தபோதிலிருந்தே தொடர்ந்து நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கிறது பறை. நாம் இன்று காணக்கூடிய வட்ட வடிவமான தோல் கருவி, ஒரு வகையான பறைதான். ஒருமுகப் பறை, இருமுகப் பறை, மும்முகப்பறை, அஞ்சுமுகப் பறை என பலவகைகள் நம் தமிழர் வரலாற்றில் இருந்துள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற ஐந்திணை நிலங்களுக்கும் ஒவ்வொரு வகையான பறை இருந்துள்ளது. அதற்கான தாள அடிகளும் நம் மனித சமூகத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பறை ஒரு தோல் கருவி. இதனை ஒரு கலையாகவும் தமிழர் மரபாகவும் மட்டுமே பார்த்திடாமல் வாழ்வில் மனிதனுடன் சேர்ந்தே பயணிக்கும் ஒரு கருவியாகத்தான் பார்க்கிறோம். மருத நிலத்தில் வேளாண்மை செய்ய மாடுகளை பயன்படுத்த துவங்கினார்கள். ஒரு மாடு இறக்கும் போது அதன் நினைவாக அதிலிருந்து தோலை எடுத்து பயன்படுத்தினார்கள். அத்தோலிலிருந்து பறை இசைக்கருவி தயார் செய்தனர். முன்பு மனிதன் வேட்டை சமூகமா இருக்கும் போது தன்னுடைய உணவுத் தேவைகளுக்கு போக இருக்கும் தோலினை ஆடையாகவும், இசைக் கருவி செய்யவும் பயன்படுத்தினார்கள். இவ்வாறு நம் தமிழ் மரபிலிருந்து வந்த பறையினை இன்றளவும் தொடர்ந்து முக்கியமான கருவியாக பார்த்து வருகிறோம்.
பறை என்பது ஒரு இறுதிச் சடங்கின் கருவியாக பொதுச் சமூகம் நினைக்கிறது. ஆனால், அதற்கானது மட்டுமல்ல… கொண்டாட்டத்திற்கும், அறிவிப்புக்கும், அக்காலத்தின் தொலைத்தொடர்பு கருவியாகவும் பறை செயல்பட்டிருக்கிறது. வயல் வெளியில் உழுவதற்கும், பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிவிப்பதற்கும் தன்னுடைய சோகம், உற்சாகம் என எல்லாவற்றையும் மனிதன் தன் இனக்குழுக்களுடன் சேர்ந்து வாசிக்கப்பட்டதுதான் பறை. அரசர்களின் போர் படைகளுக்கு முன்பு பறை இசைக் கலைஞர்கள் சென்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அந்தக் காலத்தில் இருட்டில் காடுகளுக்குள் போகும் போது பறை முழக்கத்துடனே சென்றிருக்கிறார்கள். பறையாளர்கள் யானைக்கு மேல் ஏறிதான் பறை வாசித்திருப்பதாகவும் அரசர்களுடைய பக்கத்து அரியணையில் அவர்களுக்கு இடம் இருந்ததாகவும் சில வரலாற்று தரவுகளை ஆய்வாளர்கள் இன்று குறிப்பிடுகின்றனர்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.
“ஆரிய சமூகம் வரத் தொடங்கிய பின் குலத் தொழிலை நோக்கி நகர்த்த ஆரம்பிக்கும் போது பறையினை ஒரு சாவுக் கருவியாக மாற்றுகிறார்கள். பறை வாசிப்பவர்களை பறையாளர்கள் என்று சொல்வது மாறி, பறையர்கள் என்கிற சாதிக்குறிப்பாக அதை மாற்றி, குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் பறை வாசிப்பார்கள் என்று சொன்னார்கள். பெரும்பான்மையாக மரண வீடுகளில் பறை இசைக்க காரணம், மருத்துவ வசதிகள் பெரும்பாலும் இல்லாத போது இறந்தவரின் காதுகளில் ஒலிக்கும்படி ஓங்கி அடிப்பார்கள்.
அந்த சத்தத்திற்கு அவர் எழுந்திருக்கவில்லை எனில் அந்நபரின் இறப்பை மேலும் உறுதிப்படுத்திக்கொண்டனர். காலப்போக்கில் இதனை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கி தள்ளும் போது இது ஒரு இழிவான தொழிலாக நகர்த்தியதன் விளைவுதான் இன்றைக்கு பறையை ஒரு சாவுக்கான கருவியாக பார்க்கும் தருணம். இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு விஷயங்கள் தெரியாத வரைக்கும் யாரோ ஒருவரால் திணிக்கப்படும் ஒரு பொது புத்தியாக இக்கருத்து நிலவுகிறது.
பறையிசை கலைஞர்கள் கலைக்குழுக்களாக இயங்கி செயல்பட ஆரம்பிக்கும் போது, இளைஞர்கள் அதன் அரசியலையும் அதற்கான வரலாற்றையும் தெரிந்து கொண்டு பறை பற்றிய பொதுவான கருத்துக்களை மாற்றுவதற்கு தயாராகிறார்கள். அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பறை இசைக் கலைஞர்களுக்கும் இருக்கிறது என்பதை உணர்ந்து கலைக்குழுக்கள் இயங்கி வருகின்றன. பறையிசைப்பவர்கள் அறிவுசார் கலைஞர்களாக மாறும் போது பொதுமக்களிடம் பறையின் சிறப்பை கொஞ்சம் எளிமையாக கொண்டு சேர்க்க முடியும்.
பறைக்கும் மற்ற இசைக் கருவிகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. பறை இசைப்பதற்கு இசைக்குறிப்புகள் எதுவும் தேவையில்லை. நம் தமிழரின் உணர்வுகளுடன் கலந்த பறையினை மக்களிடம் இருந்து வேறுபடுத்தி பார்க்க முடியாது. தமிழர் மரபில் அறுவடைக் காலமான தை மாதத்தை பொங்கல் திருவிழாவாக கொண்டாடுகிறோம்.
அதே போல உழவர்களை அழைக்கவும் விதைப்பதற்கும் அறுவடை செய்வதற்கு ஊக்கமளிக்கவும் பறையை பயன்படுத்துவது நம் தமிழர் மரபில் இருப்பதால், காலம் காலமாக தொடர்ந்து நம் மக்கள் நாட்டுப்புறக் கலைகளுடன் பறையிசைத்து மகிழ்கின்றனர். ஆதிகாலத்திலிருந்தே உழைக்கும் வர்க்கம் அதாவது, இனக்குழுக்கள் வேலை முடித்து வந்து களைப்பை போக்க பறை எடுத்து ஆடினார்கள். எனவே, பறை பாலினப் பாகுபாடும், சாதிய-இனப் பாகுபாடும் இல்லாத, எப்போதும் எல்லோருக்குமான ஒரு சமத்துவக் கருவி” என்றார்.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
