சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே!

நன்றி குங்குமம் தோழி

பெண்களின் ஆகச்சிறந்த மற்றும் அணிவதற்கு எல்லா வகையிலும் வசதியாக இருக்கும் உடைதான் சுடிதார். அந்த உடைக்கான வரலாறு முகலாயர்களின் காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முகலாயர்களின் மேற்கு ஆசிய தொடர்புகள் மூலம் இந்தியாவில் பரவியது. முகலாய கால ஓவியங்களில் ஆண், பெண் இருபாலரும் சுடிதார் போன்ற உடையை அணிந்திருப்பதை காண முடியும்.

ஆடையின் மேல் பகுதி அகலமாகவும் கால் பகுதி இறுக்கமாக அமைந்து சுருக்கங்கள் இருப்பது போல் வடிவமைக்கப்படும். காலில் அமைக்கப்பட்டிருக்கும் சுருக்கங்களை ‘சுரிஸ்’ என்று குறிப்பிடுவார்கள். அதிலிருந்து சுரிதார் என்ற வார்த்தை உருவாகியிருக்கலாம். பேச்சு வழக்கில் சுடிதாராக மாறிப்போனது. தற்போது பாரம்பரியத்தின் எச்சத்தோடு நாகரீகத்தையும் இணைத்து பலவிதங்களில் உருவாக்கப்படும் சுடிதார்கள் இந்திய ஆடை உலகில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளன. வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் விரும்பி அணியக்கூடிய ஒரே ஆடை சுடிதார்தான்.

சமீப காலமாக செட்டிநாடு காட்டனில் உருவாக்கப்படும் சுடிதார்கள் டிரெண்டாகி வருகின்றன. செட்டிநாடு சேலைகளுக்கு இருந்த மவுசு இப்பொழுது சுடிதார்களுக்கும் கூடியுள்ளது. குறிப்பாக தமிழ் பாரம்பரிய கோலங்கள், நகைகள், இசைக்கருவிகளின் டிசைன்களை ஒருங்கிணைத்து ரெடிமேட் சுடிதார்களை வடிவமைத்து வருகிறார் பிரியா. இவர் தன்னுடைய ‘இவள்’ பொட்டிக்கில் இது போன்ற பாரம்பரிய டிசைன்கள் கொண்ட சுடிதார்களை அறிமுகம் செய்துள்ளார்.

‘‘எனக்கு பெரம்பலூர் மாவட்டம், அ.மேட்டூர் கிராமம்தான் சொந்த ஊர். குடும்பத்துல நான் தான் முதல் பொறியியல் பட்டதாரி. அதில் முதுகலைப் பட்டமும் படிச்சிருக்கேன். திருமணத்திற்குப் பிறகு குவைத்தில் பொறியியல் சார்ந்த வேலையில் சேர்ந்து அங்கேயே செட்டிலாகிட்டேன். என் அப்பா ஒரு பிசினஸ்மேன். அவரைப் பார்த்து வளர்ந்த எனக்கும் பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. குறிப்பாக அவரின் அசாத்திய வியாபார திறன்தான் என்னையும் இந்த துறைக்குள் அழைத்து வரக் காரணம். எனக்கு ஒரு வேலை செய்தால் அது மாறுபட்டிருக்க வேண்டும் என்று நினைப்பேன். குறிப்பாக தமிழ் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் தருவேன்’’ என்றவர், 2020ல் ‘இவள்’ என்ற பெயரில் பெண்களுக்கான பிரத்யேகமான ஆன்லைன் ஸ்டோரை தொடங்கியுள்ளார்.

‘‘தமிழர் மரபை உலகளவில் கொண்டு செல்ல ஃபேஷன் துறைதான் சிறந்தது. அதன்படி நான் உருவாக்கியதுதான் ‘இவளின் மாபியா’… முழுக்க முழுக்க பெண்களுக்கான ஆடையகம். இங்கு குடும்பத் தலைவிகளுக்கான சேலைகள், டீனேஜர்களுக்கான சுடிதார்கள், பாவாடை தாவணிகள், அலுவலக பெண்களுக்கான சேலைகள், சுடிதார் என எல்லா பெண்களையும் திருப்திப்படுத்தும் வகையில் நவநாகரீக ஆடைகளும் கிடைக்கும். பெண்களுக்கான ஆடைகளை டிசைன் செய்வது என் மனதோடு இணைந்தது என்பதால்தான் இந்த துறையில் கால் பதித்தேன். முதலில் சாதாரணமாக ஒரு யூனிட்டாகத்தான் ஆரம்பித்தேன். இப்போது மூன்று கிளைகளாக விரிந்துள்ளது.

செட்டிநாடு பருத்தியில் நெய்யும் சேலைகள், சுடிதார் உடைகளுக்கு எப்போதுமே பெண்கள் மத்தியில் மதிப்பு அதிகம். காரணம், அதன் நேர்த்தி, மண் சார்ந்த நிறங்கள், பட்டு பார்டர்கள்… காஞ்சி பட்டுத்துணிகளுக்கு அடுத்து உலகளவில் வாழும் தமிழர்கள் அதிகம் விரும்புவது செட்டிநாடு காட்டன் ரக ஆடைகளைதான். அதை முதன்முதலாக அறிமுகப்படுத்தியதே எங்களின் நிறுவனம் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள முடியும். பாரம்பரியத்திலும் ட்ரெண்டிங் செய்து காட்டினேன். அதற்கு ‘அமலி’ எனப் பெயரிட்டேன். வீட்டு வாசலில் இடும் புள்ளிக்கோலத்தை சல்வாரில் கொண்டு வந்தேன். குறிப்பாக 2K பெண்களுக்கு கழுத்துப் பகுதியில் எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாட்டினை தாண்டி புள்ளிக்கோல டிசைன்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது.

தைக்கப்படாத சுடிதார் துணிகள் மற்றும் ரெடிமேட் என இரண்டு விதமாக அமலி டிசைன்களை விற்பனை செய்கிறேன்’’ என்றவர், பாவாடை தாவணியில் 600க்கும் மேற்பட்ட டிசைன்கள், செட்டிநாடு காட்டன் சல்வாரில் 300 டிசைன்களை வடிவமைத்துள்ளார். ‘‘நான் அமலியை ஆரம்பிக்க காரணம் என்னுடைய இந்த டிசைன்கள் பிரபல ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் கடைகளில் வலம் வர வேண்டும் என்பதுதான். தற்போது கூடுதல் டிசைன்களாக பாரம்பரிய நகைகள் மற்றும் இசைக்கருவிகளின் வடிவத்தையும் இதில் இணைத்துள்ளேன். பிரி ஆர்டர் முறையிலும் விற்பனை செய்கிறோம். கலர் காம்பினேஷன், டிசைன்கள் குறித்து நாங்க முதலில் குழுவாக கலந்து ஆலோசித்துதான் அந்த டிசைன்களை மார்க்கெட்டில் கொண்டு வருவோம்’’ என்றவர், குவைத்திலிருந்தே சென்னையில் இருக்கும் யூனிட்டினை இயக்கி வருகிறார்.

‘‘ஆரம்பத்தில் சிறிய அளவில் துவங்கினாலும், தற்போது 100க்கும் மேற்பட்டவர்கள் என்னிடம் வேலை செய்கிறார்கள். டிசைனர்கள் மட்டுமே 45 பெண்கள் உள்ளனர். பொறியியல் வேலையை பார்த்து வந்தாலும் பிசினஸிலும் அதே கவனத்தை செலுத்தி வருகிறேன். பெண்களிடம் பொறுப்பு மட்டும் கொடுத்திட்டா போதும்… பம்பரமா சுத்தி சுத்தி முடிச்சுடுவாங்க. பொறுப்பை ஏத்துக்க தயங்குறவங்கதான் குடும்பத்தை பாத்துக்கணும்னு சாக்கு சொல்வாங்க’’ என்றவர், ‘இவள் சுட்டீஸ்’ என்ற குழந்தைகளுக்கான ஆடை யூனிட்டையும் நிர்வகித்து வருகிறார்.

‘‘இவை தவிர காரிகை சாரீஸ் என்ற பெயரில் சேலைகளுக்கான இன்ஸ்டா பக்கத்தை வைத்துள்ளேன். அதிலும் பல வண்ணங்கள், ரகங்களில் சேலை கிடைக்கும். எல்லா பெண்களும் தனக்கான அடையாளம் கிடைக்கும் வரை உழைக்க வேண்டும். அதே சமயம் நாம் செல்லும் இடமெல்லாம் ஏதோ ஒரு வகையில் நம் மண் வாசனையை தெளித்து விட்டு செல்ல வேண்டும்’’ என்கிறார் பிரியா.

தொகுப்பு: கலைச்செல்வி

Related Stories: