கடின உழைப்பு, ஸ்மார்ட் வேலை தான் கை கொடுத்தது!

நன்றி குங்குமம் தோழி

‘‘என்னுடைய வீட்டில் சிறிய அளவில் மூணு தையல் இயந்திரம் கொண்டுதான் நான் இந்தத் தொழிலை ஆரம்பித்தேன். ஆனால், நினைச்சே பார்க்கல படிப்படியா அது இவ்வளவு பெரிய அளவில் சக்சஸா மாறும்னு நினைக்கவே இல்லை’’ என்று பேசத் துவங்கினார் சென்னையை சேர்ந்த ஷோபிதா. இவர் சென்னையில் ‘நாச் பொட்டிக்’ என்ற பெயரில் அழகான டிசைனர் உடைகளை தைத்து பிரபல துணிக் கடைகளுக்கு மட்டுமில்லாமல் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் டிசைன் செய்து தருகிறார்.

‘‘நான் இந்த துறைக்கு வர என் கணவரும் ஒரு காரணம். அவர் ராஜபாளையத்தில் டெக்ஸ்டைல் தொழிற்சாலை வச்சிருந்தார். புடவைக்கு டையிங், பத்திக் பிரின்ட் எல்லாம் டிசைன் செய்து தயாரித்து வந்தார். எனக்கு சின்ன வயசில் இருந்தே ஃபேஷன் மேல தனி ஈடுபாடு உண்டு. சொல்லப்போனால் நான் கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு திருமணமாயிடுச்சு. என் கணவரும் அதே தொழில் சார்ந்து இருந்ததால், எனக்கு அந்த துறை மேல இன்னும் ஆர்வம் அதிகமானது. ஆனால், டையிங் செய்ய அதிகளவு தண்ணீர் தேவை. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நாங்க அந்த தொழிற்சாலையை மூடிவிட்டோம். டிசைனிங் சார்ந்து முழுமையா படிச்ச பிறகுதான் நான் பொட்டிக் பிசினஸே ஆரம்பிச்சேன்.

வீட்டில் சிறிய அளவில் ஏழு வருஷம் முன்பு ஆரம்பிச்சேன். பட்டுப் பாவாடை, தாவணி ரெடிமேட் உடைகளை மொத்த விற்பனைக்கு பிரபல துணிக் கடைகள் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் உள்ள சின்னச் சின்ன துணிக் கடைகளுக்கும் கொடுக்க துவங்கினேன். ஒரு வயது முதல் 14 வயது பெண் குழந்தைக்கு நாங்க பட்டுப் பாவாடையை வஸ்த்ரா என்ற பெயரில் டிசைன் செய்து வந்தோம். என் கணவர் ஏற்கனவே இந்த துறையில் இருந்ததால், என்னால் மொத்த விற்பனைக்குள் நுழைய முடிந்தது. அவர் ஏற்கனவே பிரபல ஜவுளிக் கடைகளுக்கு புடவைகளை சப்ளை செய்து வந்தார். அவரிடம் நான் சொன்ன போது அவரும் செய்யலாம்னு சொன்னார்.

இது முழுக்க முழுக்க ரெடிமேட் பட்டுப்பாவாடை என்பதால், அனைத்து சைஸ்கள் மற்றும் வயதில் உள்ளவர்களுக்கு டிசைன் செய்து தருகிறோம். குழந்தை அணியும் பட்டுப் பாவாடையில் ஆரி வேலைப்பாடு எல்லாம் செய்தேன். அந்த சமயத்தில் யாருமே பட்டுப்பாவாடைக்கு இவ்வளவு டிசைன் செய்யல. நான் என் டிசைன்களை காண்பித்த போது எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. பெரிய ஜவுளிக் கடைகள் வரவேற்பு தந்தாங்க. அப்படித்தான் படிப்படியா என்னுடைய தொழிலை நான் விரிவுப்படுத்தினேன். என்னுடைய டிசைன் பார்த்து பலர் தனிப்பட்ட முறையில் செய்து தரச்சொல்லிக் கேட்டாங்க. அவங்களுக்காக ஆரம்பிச்சதுதான் ‘நாச் பொட்டிக்’’ என்றவர் பட்டுப்பாவாடையை தேர்வு செய்தது குறித்து விவரித்தார்.

‘‘எங்க வீட்டில் திருமணம், பண்டிகை நாட்களுக்கு பட்டுப்பாவாடைதான் எடுத்து தருவாங்க. ஏழு வருடம் முன்பு இந்த உடை அணிவது ரொம்பவே குறைஞ்சிடுச்சு. அதனாலதான் நான் அதை தேர்வு செய்தேன். ஒவ்வொரு பாவாடையும் நானே டிசைன் செய்வேன். ஃபேஷன் மாறிக் கொண்டே இருக்கும் துறை. சீசனுக்கு ஏற்ப நிறங்களும் மாறும். மேலும், இந்த காலக்கட்டத்திற்கு இந்த உடைகள் ஃபேஷனில் நிலவும் என்பதை நான் தெரிந்து கொண்டு அதற்கேற்ப டிசைன் செய்வேன். பட்டுப் பாவாடையில் 25க்கும் மேற்பட்ட டிசைன்களை வடிவமைத்து கொடுப்போம். அந்த டிசைன் ஆறு மாசம் இருக்கும். அதன் பிறகு வேறு டிசைன்களை கொண்டு வருவோம்.

என்னுடைய ெபாட்டிக்கிலும் அப்படித்தான் வாடிக்கையாளர்களுக்கு உடைகளை வடிவமைத்து தருகிறோம். மேலும், ஒரு பிளவுசினை ஒரு மணி நேரத்தில் தைத்து கொடுப்பதுதான் எங்களின் ஸ்பெஷாலிட்டி. ஆரி வேலைப்பாடு என்றால் இரண்டு நாட்களில் கொடுப்போம். பிளவுஸ் மட்டுமில்லை அனைத்து உடைகளும் நாங்க டிசைன் செய்கிறோம். மேலும், ஒருவரின் உடலுக்கு ஏற்ப எந்த உடை நல்லா இருக்கும் என்றும் நாங்க ஆலோசனை சொல்வோம்.

இந்த துறையை பொறுத்தவரை வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவது அவ்வளவு சுலபமில்லை. நான் ஆரம்பித்த போது பல இரவுகள் தூங்காமல் வேலை பார்த்து இருக்கிறேன். காரணம், குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்யணும். நேரம் தவறினால் பிசினஸும் கிடைக்காது. குறிப்பா வஸ்த்ராவில் 500 பாவாடை ஆர்டரை ஒரு வாரத்தில் டெலிவரி செய்ய சொல்வாங்க. இரவு, பகல் பார்க்காமல் வேலை பார்த்து இருக்கோம். அதில் கற்றுக் கொண்ட டைம் மேனேஜ்மென்ட் தான் எங்களின் பொட்டிக்கிற்கு கைகொடுத்தது.

இங்க வாடிக்கையாளர்கள் கேட்கும் நேரத்தில் உடைகளை கொடுக்க முடிகிறது. ஆரம்பத்தில் டிசைன் மட்டுமில்லை பேக்கிங் முதல் டெலிவரி வரை அனைத்தும் நான்தான் பார்த்து அனுப்வேன். லாஜிஸ்டிக் மற்றும் துணிகளை வாங்குவதிலும் பல சிக்கல்களை சந்தித்தேன். தற்போது சேலம், ஈரோடு, இளம்பிள்ளை, காஞ்சிபுரம் போன்ற இடங்களில் இருந்து துணிகளை வாங்குகிறேன். தமிழ்நாடு மட்டுமில்லாமல் சிங்கப்பூரிலும் சப்ளை செய்றேன்.

சிலர் லோ பட்ஜெட்டில் கேட்பாங்க. முழுக்க முழுக்க பட்டு இல்லாமல் பார்க்க பட்டு மாதிரி கேட்பாங்க. வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதை செயல்படுத்தி தருவோம். எல்லாவற்றையும் விட கடின உழைப்பு, ஸ்மார்ட் வேலைதான் எனக்கு இன்று வரை கை கொடுத்து வருகிறது.

நான் பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்ததில்லை. இன்ஸ்டா மற்றும் நண்பர்கள் மூலமாகத்தான் எனக்கான வாடிக்கையாளர்கள் வந்தாங்க. தற்போது சென்னையில் இரண்டு கிளைகள் செயல்பட்டு வருகிறது. மூன்றாவது கிளையினை திறக்க இருக்கிறோம். மேலும், பல கிளைகளை திறக்கும் எண்ணம் உள்ளது. அடுத்து ரீடெயில் துறையிலும் கால் பதிக்கும் எண்ணம் உள்ளது. இப்படி நிறைய பிளான் இருக்கு. ஒவ்வொன்றாக செயல்படுத்துவோம்’’ என்றார் நம்பிக்கையுடன் ஷோபிதா.

தொகுப்பு: ஷம்ரிதி

Related Stories: