கலையை தலைவணங்கிக் கற்றுக் கொண்டால் தலைநிமிர்ந்து வாழலாம்!

நன்றி குங்குமம் தோழி

தமிழர் பண்பாட்டு விழாக்களில் சிறப்பு வாய்ந்தது பொங்கல் விழா. அன்றைய விழா கொண்டாட்டத்தில் நாட்டுப்புறக் கலைகளான கரகாட்டம், மரக்கால் ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பறை ஆட்டம் போன்றவற்றை காணும் போது களிப்பாக இருக்கும். குறிப்பாக 5 முதல் 12 அடி வரையிலான மரக்கட்டையை இரு கால்களிலும் கட்டிக்கொண்டு ஆடும் மரக்கால் ஆட்ட கலைஞர்களை கண்டால் பிரமிப்பாக இருக்கும்.

கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர்புறங்களிலும் நம் பாரம்பரிய கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒரு சிறந்த கலைஞனுக்கு சரியான சன்மானம் கிடைக்கவே சிரமப்பட்ட நிலையிலிருந்து மேம்பட்டு இன்று அரசு முதல் கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளிலும் கலை விழாக்களை நாட்டுப்புறக் கலைஞர்களே சிறப்பிக்கின்றனர்.

தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான மரக்கால் ஆட்டத்தை உலக அரங்கிற்குத் தன் உழைப்பால் கொண்டு சென்றவர் கலைமாமணி மதுரை கோவிந்தராஜ். மதுரை அரசு இசைக் கல்லூரியின் நாட்டுப்புறக் கலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சென்னையில் நடக்கவிருக்கும் பொங்கல் விழா கொண்டாட்டத்தின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தயாராகிவரும் நாட்டுப்புறக்கலைஞரான மதுரை கோவிந்தராஜிடம் பேசினோம்.

“மாதவி ஆடிய பதினொரு வகையான ஆடல்களில் மரக்கால் ஆட்டமும் ஒன்று. சிலப்பதிகாரத்தின் ‘கடலாடு காதை’ பகுதியில் இதற்கான புராணப் பின்னணியும் உள்ளது. போர்க்களத்தில் அசுரர்கள் பாம்பு, தேள், நட்டுவாக்காளி போன்ற விஷ ஜந்துக்களின் உருவெடுத்துத் தேவர்களை தாக்கிய போது, போர்க்களத் தெய்வமான கொற்றவை அதாவது, காளி தன் கால்களில் மரக்கட்டைகளை கட்டிக்கொண்டு அவர்களை மிதித்து அழித்து ஆடினார். இதுவே மரக்கால் ஆட்டம் என்று அழைக்கப்பட்டது. இந்த இலக்கியத்தை அறிந்த பிறகுதான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பனிரெண்டு அடி மரக்கால் கட்டி ஆடத்தொடங்கினேன். கால்களில் கட்டப்படும் மரக்கட்டைகளின் உயரத்தை பொறுத்து சின்ன மரக்கால் ஆட்டம், பெரிய மரக்கால் ஆட்டம் வகைப்படுத்தப்படும். 5 அடி முதல் 12 அடிகளில் கூட மரக்கால் கட்டி ஆடுவார்கள்.

மற்ற நாட்டுப்புறக் கலைகளான கரகாட்டம், காவடி ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்றவையும் சிறப்பு வாய்ந்தவைதான். கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் நாட்டுப்புறக் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். பொங்கல் விழா கொண்டாட்டங்களில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நிச்சயம் இடம் பெறுகின்றன. அரசு சார்பில் நடத்தப்படும் பெரும்பாலான நிகழ்ச்சிகளிலும் நாட்டுப்புறக் கலைகளுக்கு முக்கியத்துவம் உண்டு.

பள்ளி, கல்லூரிகளிலும் கல்வியுடன் கலை பண்பாட்டை மேம்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு நாட்டுப்புறக் கலைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. அரசு சார்பிலும் கலைஞர்களுக்கான சலுகைகள் கிடைக்கின்றன. தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும் இந்நிலையில், மக்கள் நாட்டுப்புறக்கலைகளை ரசிக்கின்றனர். தமிழரின் பண்பாட்டு கலைகளான நாட்டுப்புறக் கலைகளை கைவிடாமல் தொடர்ந்து ஆதரவளித்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சென்று அழியாமல் காக்க வேண்டும்” எனும் கோவிந்தராஜ் ஒரு நாட்டுப்புறக் கலைஞராக தன் கலைப்பயணம் குறித்து பகிர்ந்தார்.

“உயரமாக நின்று நான் ஆடுவது போல என்னை வாழ்வின் உயரத்திற்குக் கொண்டு சென்றதும் நாட்டுப்புறக்கலையான இந்த மரக்கால் ஆட்டம்தான். தொடக்கத்தில் என் குடும்பத்திற்கும் கலைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. என்னுடைய பால்ய காலம் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தது. 6ம் வகுப்பு படிக்கும் போது, ஜவஹர் சிறுவர் மன்றம் மூலம் நேஷனல் பால் பவன் நடத்திய இலவசக் கலைப் பயிற்சி முகாமில் சேர்ந்தேன். ஆடல் கலை மீது கொண்ட ஆர்வத்தை விட, அங்கு உணவு கிடைக்கும் என்பதற்காகவே செல்வேன்.

பள்ளிக்கு நான் புத்தகப்பை கொண்டு செல்கிறேனோ இல்லையோ, மதிய உணவிற்காக ஒரு தட்டை எப்போதும் கையில் வைத்திருப்பேன். கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் உணவு கிடைக்கும் என்பதால் இக்கலையை கற்க தொடங்கினேன். என் பசியை போக்கத் தொடங்கிய இந்தப் பயணம், பின்னாளில் பல நூறு கலைஞர்களின் பசியை போக்கும் ஒரு பேரியக்கமாக மாறும் என்று நான் அன்று நினைக்கவில்லை.

என் 11 வயதில் கற்கத் தொடங்கினாலும், சுமார் ஆறு ஆண்டுகள் தீவிரப் பயிற்சிக்குப் பின்னரே இக்கலையில் முழுமையாக தேர்ச்சிப் பெற்றேன். பள்ளி படிப்பை முடித்ததும் நாட்டுப்புறக் கலைகளை நான் முறையாக கற்க வேண்டும் என்பதற்காக மதுரை இசைக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தேன். படிப்புதான் ஒரு கலைஞனுக்கு அங்கீகாரமும் மரியாதையும் கொடுக்கும் என்று மூத்த நாட்டுப்புறக் கலைஞர்கள் எனக்கு அறிவுறுத்தியதால், டிப்ளமோ படித்துக்கொண்டிருக்கும் போதே, தொலைதூரக்கல்வி முறையில் பி.ஏ தமிழ் படித்தேன். தொடர்ந்து எம்.ஏ, எம்.பில் பட்டப்படிப்புகளையும் முடித்தேன். என் கல்வி எனக்கான அங்கீகாரத்தை கொடுத்தது.

அதன் பிறகு ‘மதுரை கோவிந்தராஜ் கிராமியக் கலைக்குழு’ ஒன்றை உருவாக்கினேன். இதுவரையில் 22 நாடுகளுக்கு சென்று நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். என் கலைக்குழு கலைஞர்களை பாஸ்போர்ட் எடுக்க வைத்து, வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வேன். டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா முதற் கொண்டு பல்வேறு அரசு விழாக்களிலும் எங்க கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

வெளியூர், வெளிநாடுகள் நிகழ்ச்சிகள் முடித்து வந்த பின்னர், கலைக்குழு மாணவர்கள் நீண்டகால ஓய்வெடுக்க முயற்சித்தாலும் கல்விதான் முக்கியம் என்று சொல்லி கல்லூரிக்கு வரவைத்துவிடுவேன். இது ஒரு நாட்டுப்புறக்கலை ஆசிரியராக என் கடமையாகவும் நினைக்கிறேன். நாட்டுப்புறக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் கல்விகற்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்” என்றவர், நாட்டுப்புறக் கலைகளை இக்கால கலைஞர்களுக்கு ஏற்றாற்போல சில புதுமைகளை செய்து கற்பிக்கிறார்.

“நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மிக முக்கியமானது ஆடை அலங்காரம். பாரம்பரியமாக மரக்கால் ஆட்ட கலைஞர்கள் காலில் கட்டியிருக்கும் மரக்கால் தெரியும்படி குட்டையான ஆடைகளையே அணிந்தனர். இதில் மாற்றங்களை செய்து, 5 முதல் 12 அடி உயரக் கட்டைகளை முழுமையாக மறைக்கும் வகையில் நீண்ட கால்சட்டைகளை வடிவமைத்தேன். வேடிக்கையான வேடங்களுக்குப் பதிலாக, கம்பீரமான ‘ராஜ வேடம்’ மற்றும் மகுடங்களை அணிந்தேன். மரக்கால்களை கட்டிக்கொண்டு நிகழ்ச்சிகளில் வெறும் நடைப்பயணமாக செய்து வந்ததை மாற்றி, கால்களை முன்னும் பின்னும் உயர்த்தி ஆடுவது, நொண்டி அடித்து ஆடுவது எனப் பல வித்தைகளை மரக்கால் ஆட்டத்தில் அறிமுகப்படுத்தினேன்.

இதனை மக்கள் வெகுவாக ரசித்தனர். சாதனைகள் எளிதில் வந்துவிடவில்லை. 2017-18 காலக்கட்டத்தில் எனக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டபோது, சில தனிநபர்கள் நீதிமன்றத்தில் தடை விதித்தனர். தகுதியற்றவர்களுக்கு விருது வழங்கப்படுவதாகக் கூறி விருது வழங்குவதை தடுத்தனர். ‘‘கலை விற்பனைக்கு அல்ல” என்று முழங்கி, நீதிக்காகச் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் போராடினேன். ஒன்றரை ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 2021 பிப்ரவரி மாதம் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இன்று ‘மதுரை கோவிந்தராஜ் கிராமிய கலைக்குழு’ மூலம் சுமார் 300 கலைஞர்களை வழிநடத்துகிறேன்.

கலைக்கு ஏது சாதி, மதம். இதில் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என அனைத்து சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்களும் உள்ளனர். ஒழுக்கம்தான் என் கலைக்குழுவிற்கு முக்கியம். கலைஞர்கள் மேடைக்கு வரும்போது மது அருந்தக்கூடாது. கண்ணியமான ஆடை அணிய வேண்டும்.

ஒரு கலைஞன் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்க கல்வியே சிறந்த ஆயுதம் என்பதால் குழுவில் உள்ள இளைஞர்கள் கட்டாயம் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன். 100 முதல் 1000 கலைஞர்களை கொண்டு மரக்கால் ஆட்டத்தில் கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதே என் கனவு. ‘எவன் ஒருவன் கலையை தலைவணங்கிக் கற்றுக் கொள்கிறானோ, அவன் தலைநிமிர வாழலாம்’ என்பதே என் தாரக மந்திரம். கலை வளர்ப்போம், தலை நிமிர்வோம்” என்றார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

Related Stories: