கே.வி.குப்பம், ஜன.22: கே.வி.குப்பம் அருகே தண்ணீர் கேட்பதுபோல் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கனேரி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் விஷால்(19). கூலி தொழிலாளி. இவர் நேற்று கே.வி.குப்பம் அருகே உள்ள கிராமத்தில் பணி முடித்துவிட்டு, மதுபோதையில் தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் உள்ள ஒருவரது வீட்டின் கதவை தட்டி தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது வீட்டில் 45 வயது மதிக்கத்தக்க பெண் தனியாக இருந்ததை அறிந்த விஷால் திடீரென அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வாலிபரை மடக்கி பிடித்து கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கே.வி.குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா வழக்கு பதிவு செய்து விஷாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
