வேலூர், ஜன.21: வேலூர் சரகத்தில் பொங்கல் பண்டிகையின்போது நடந்த சிறப்பு சோதனையில் விதி மீறி இயங்கிய 109 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ரூ.2.21 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின்போது ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழக அரசு சார்பில் குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படுவது வழக்கம். இதேபோல் கடந்த வாரம் பொங்கல் பண்டிகையொட்டி அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க கடந்த 12ம் தேதி முதல் நேற்று வரை சிறப்பு குழுக்கள் அமைத்து, டோல்கேட்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வேலூர் சரகத்திற்கு உட்பட்ட ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஒசூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், வேலூர் சரக துணை போக்குவரத்து ஆணையர் சம்பத் மேற்பார்வையில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 12ம் தேதி இரவு முதல் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் பிற மாநில வாகனங்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வேலூர் சரகத்தில் கடந்த 12ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 804 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. இதில் சாலை வரி செலுத்தாமல் இயக்குவது உள்பட பல்வேறு விதி மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ரூ.32.18 லட்சம் அபராதம் மற்றும் வரி விதிக்கப்பட்டது. மேலும் வீதிமீறி இயக்கப்பட்ட 109 ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களுக்கு ரூ.2.21 லட்சம் அபாரதம் வசூலிக்கப்பட்டதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
