வேலூர், ஜன.20: வேலூர் போக்குவரத்துத்துறை மண்டல அலுவலகத்தில் கடந்தாண்டு பைக், கார், பஸ்கள் என்று 1.38 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் சென்னை (வடக்கு), தெற்கு, விழுப்புரம், வேலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, கோவை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய 12 வட்டார போக்குவரத்து மண்டலத்தில் 91 ஆர்டிஓ அலுவலகங்களும், 21 சோதனை சாவடிகளும் உள்ளன. வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஆய்வாளர்கள், ஓட்டுநர் உரிமங்கள், நடத்துனர் உரிமங்கள் புதியதாக வழங்குதல், புதுப்பித்தல், ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி உரிமம் வழங்குதல் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியை ஆய்வு செய்தல், வாகனங்களைப் பதிவு செய்தல், வாகனங்களை மறுபதிவு செய்தல் மற்றும் வாகன பதிவினை புதுப்பித்தல், வாகனங்களில் உரிமம் மாற்றம் செய்தல், வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
வேலூர் போக்குவரத்துத்துறை மண்டலத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 6 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இந்த 6 வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை 4 மாவட்டங்களில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 150 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் வட்டார போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 6 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கடந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை 1.38லட்சம் வாகனங்களும், பொது போக்குவரத்து பயன்பாட்டிற்கு 9,551 வாகனங்களும், சொந்த பயன்பாட்டிற்காக 13,238 நான்கு சக்கர வாகனங்களும், 1.12 லட்சம் இரு சக்கர வாகனங்களும், 2,976 மற்ற வாகனங்கள் என்று மொத்தம் 1. லட்சத்து 38 ஆயிரத்து 150 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்தாண்டு ஜனவரி கடந்த 20 நாட்களில் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
