100 நாள் வேலை திட்ட பெயரை மாற்றியதை கண்டித்து பொழிச்சலூர் கிராம சபையில் 100 பேர் மனு

பல்லாவரம்: குடியரசு தினத்தை முன்னிட்டு பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து கோஷங்களை எழுப்பியவாறு பிரதான சாலை வழியாக ஊர்வலமாக கிராமசபை நடைபெறும் இடம் வரை சென்றனர். பின்னர், கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணிகளை மேற்கொண்ட நூற்றுக்கணக்கான பெண்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தனர். இதையடுத்து, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பெயரை மாற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஆகியோரிடம் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறுகையில், ”முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் சோனியா காந்தி கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பெயரை மாற்றக்கூடாது. திட்டத்தில் 40 விழுக்காடு தொகையை மாநில அரசு வழங்க வேண்டும் என்பது மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமையை அதிகரிக்கும். இதனால் இதை எதிர்க்கிறோம். எவ்வித மாற்றமுமின்றி பழைய நிலையிலேயே ஒன்றிய அரசு இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் வரை எங்களது போராட்டம் தொடரும். புதிய வேளாண் கருப்பு சட்டம் முறியடிக்கப்பட்டதோ, அதேபோன்று இந்த பெயர் மாற்றத்தையும் நாங்கள் முறியடிப்போம்” என கூறினர்.

Related Stories: