சிவகாசி: விஜய்க்கு வாக்களிக்கவில்லை என்றால் வீட்டில் உள்ளவர்களை விஷம் வைத்து கொன்று விடுவோம் என கூறுகின்றனர் என நடிகர் கருணாஸ் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர் விஜய் எல்லோராலும் ரசிக்கப்படக்கூடிய நடிகர். சமீபத்தில் கட்சி ஆரம்பித்து தற்போது தான் அவருக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் நடத்திய நிகழ்ச்சியில் ஏற்பட்ட துயரங்களை பார்த்துள்ளோம். கரூர் துயரத்தில் ஏற்கனவே 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் சிலர் தங்கள் குடும்பத்தினர் விஜய்க்கு வாக்களிக்கவில்லை என்றால் வீட்டில் உள்ளவர்களை விஷம் வைத்து கொன்று விடுவோம் என கூறுகின்றனர்.
இப்படி அரைவேக்காட்டுத்தனமாக பேசுபவர்களின் கையில் ஆட்சியை கொடுத்தால் தமிழகத்தின் நிலை எப்படி இருக்கும் என்று பாருங்கள். விஜயின் அரசியல் எதை நோக்கி செல்கிறது என்பது புரியவில்லை. விஜய் ரசிகர்கள் நாட்டுக்காக மண்ணுக்காக உயிர் கொடுப்பதாக கூறினால் கூட பரவாயில்லை. அவருக்கு வாக்களிக்கவில்லை என்றால் விஷம் வைத்து கொல்வதாக, அதுவும் பெண்கள் சொல்வது பயமாகவே உள்ளது. வீட்டில் சமைக்கும்போது எதையாவது சேர்த்து கொடுத்து விடுவார்களோ என்ற அச்சம் ஆண்களிடையே எழுகிறது. விஜய் போன்றோர் பாஜவின் சூழ்ச்சி வலைக்குள் விழுந்து விடுவாரோ என்ற பயம் உள்ளது. திமுகவின் வாக்குகளை விஜய் பிரிக்க மாட்டார். சித்தாந்தம், கொள்கை ரீதியான வரலாற்றுச் சிறப்பு மிக்க இயக்கம் திமுக.
நேற்று வந்து பூச்சாண்டி காட்டும் இயக்கத்திற்கு பயப்படக்கூடிய இயக்கம் திமுக அல்ல. பாரத பிரதமரையே சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ளக்கூடிய முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திய திமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும். தமிழகத்தில் பாஜ காலூன்றக்கூடாது என்பதற்காக போராடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போலவே வரும் சட்டமன்றத் தேர்தலிலும் என்னால் முடிந்த அளவிற்கு பிரச்சாரம் செய்வேன். நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
