கொங்கண சித்தர் சிலை முன் மதுகுடித்து கும்பல் கும்மாளம்

மல்லசமுத்திரம், ஜன.26: வையப்பமலை கொங்கண சித்தர் குகைக்குள் புகுந்து, மது குடித்து கும்மாளமிட்ட மர்ம நபர்கள், அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை பகுதியில் உள்ள குன்றின் மேல் பழமைவாய்ந்த பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த மலை அடிவாரத்தில் கொங்கண சித்தர் குகை உள்ளது. இங்கு வாரந்தோறும் சிறப்பு பூஜை நடைபெறும். மேலும், பவுர்ணமி தினத்தில் திரளான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவர். நேற்று முன்தினம் வார வழிபாட்டிற்காக பக்தர்கள் சிலர் கொங்கண சித்தர் குகைக்கு சென்ற போது, கொங்கண சித்தர் சிலை முன்பு காலி மதுபாட்டில்கள் குவிந்து கிடந்தன.

மேலும், அங்கிருந்த பூஜை பொருட்கள் அனைத்தும் உடைக்கப்பட்டிருந்தது. இரவு நேரத்தில் குகைக்குள் புகுந்த மர்ம நபர்கள், குடித்து கும்மாளமிட்டு, காலி மது பாட்டில், டம்ளர், ஊறுகாய் பாக்கெட், நொறுக்கு தீனி பாக்கெட்டுகளை அங்கேயே போட்டு விட்டு போதையில் உறங்கியுள்ளனர். போதை தெளிந்தவுடன் பழைய சாக்குப்பை, விறகு கொண்டு தீ மூட்டி குளிர் காய்ந்துள்ளனர். பொழுது புலர்ந்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரமாக தூய்மை பணியில் ஈடுபட்டு சுத்தம் செய்தனர். அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் பாதுகாப்பு இரும்பு கிரில்கேட் போட முடிவு செய்துள்ளனர். மேலும், பாதுகாப்பு கேட்டு போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

Related Stories: