மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாமக்கல், ஜன.26: குடியரசு தின விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா நடைபெறும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 77வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று(26ம் தேதி) காலை 8 மணிக்கு நடைபெறும் விழாவில், மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.

மேலும், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கிறார். சிறப்பாக பணியாற்றிய 33 காவல்துறையினர் மற்றும் பல்வேறு அரசுத்துறைகளைச் சேர்ந்த 284 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார். இதைத் தொடர்ந்து பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.64 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். குடியரசு தினவிழாவையொட்டி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 4 நாட்களாக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றது. நேற்று காலை இறுதி ஒத்திகை நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி, எஸ்பி விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடியரசு தினவிழா நடைபெறும் மைதானத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன தணிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் 24 மணி நேரமும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இன்று(26ம் தேதி) காலை 9 மணிக்கு குடியரசு தினவிழா நடைபெறுகிறது. இதில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., பங்கேற்று தேசியக்கொடி ஏற்றுகிறார். மாநகராட்சியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் மேயர் கலாநிதி கொடி ஏற்றி வைக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

Related Stories: