குமாபாளையம், ஜன.20: குமாரபாளையத்தில், டூவீலரில் மது பாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தவெக நிர்வாகியின் கணவரை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் போலீசார் நேற்று மாலை சேலம் மெயின்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த டூவீலரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ஒரு அட்டைப்பெட்டியில் 126 மதுபாட்டில்கள் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வண்டியை ஓட்டி வந்த குமாரபாளையத்தைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவரிடம் விசாரித்தனர். இதில், ஓலப்பாளையத்தில் உள்ள தவெக மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் மஞ்சுவின் கணவர் ரவிச்சந்திரன் என்பவர் நடத்தி வரும் சந்து கடைக்கு மது பாட்டில்களை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் விமல்ராஜை கைது செய்தனர். அவரிடமிருந்து மதுபாட்டில்கள் மற்றும் டூவீலர் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும், ரவிச்சந்திரனை தேடிச்சென்றனர். விமல்ராஜ் பிடிபட்டதை அறிந்த அவர், எப்படியும் போலீசார் தன்னை தேடி வருவார்கள் என அறிந்து தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
