நெல்லை: நெல்லை, மதுரை வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் – தாம்பரம் அம்ரித் பாரத் ரயிலுக்கான கட்டணங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லை – தாம்பரம் 2ம் வகுப்பு படுக்கை வசதிக்கு ரூ.420ம், பொது பெட்டிகளில் ரூ.240ம் செலுத்தி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு – கேரளா ஆகிய இரு மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கும் வகையில் திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல் இடையிலான புதிய வாராந்திர அம்ரித் பாரத் வாராந்திர ரயில் அறிமுக சேவையை பிரதமர் மோடி கடந்த 23ம் தேதி திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த ரயிலின் வழக்கமான சேவைகள் வருகிற 28ம் தேதி முதல் துவங்குகிறது. அதன்படி முதல் சேவை தாம்பரத்தில் இருந்து 28ம் தேதியும், திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 29ம் தேதியும் துவங்குகிறது. வாரம் தோறும் புதன்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் ரயில் மதுரைக்கு வியாழக்கிழமை அதிகாலை 1.05 மணிக்கும், விருதுநகருக்கு 1.43 மணிக்கும், கோவில்பட்டிக்கு 2.23 மணிக்கும், நெல்லைக்கு 3.45 மணிக்கும், நாகர்கோவில் டவுனுக்கு 5.35 மணிக்கும் சென்றடைகிறது. இறுதியாக காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேர்கிறது. மறுமார்க்கத்தில் வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அம்ரித் பாரத் ரயில் நாகர்கோவில் டவுனுக்கு 11.44 மணிக்கும், நெல்லை சந்திப்பிற்கு மதியம் 1.20 மணிக்கும், கோவில்பட்டிக்கு 2.28 மணிக்கும், விருதுநகருக்கு 3.13 மணிக்கும், மதுரைக்கு மாலை 3.55 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 4.55 மணிக்கும் செல்கிறது. அன்று நள்ளிரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
அம்ரித் பாரத் எக்ஸ்பிரசில் 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 11 பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள், ஒரு உணவுக்கூடம் பெட்டி என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்கு நெல்லை – தாம்பரம் ரூ.420, விருதுநகர் – தாம்பரம் ரூ.370, மதுரை – தாம்பரம் ரூ.340, திண்டுக்கல் – தாம்பரம் ரூ.300 என கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதே போல பொது பெட்டிகளில் பயணம் செய்ய நெல்லை – தாம்பரம் ரூ.240, விருதுநகர் – தாம்பரம் ரூ.205, மதுரை – தாம்பரம் ரூ.195, திண்டுக்கல் – தாம்பரம் ரூ.170 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில்களை போல நவீன வசதிகளுடன், அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட்ட போதிலும் இதில் ஏசி பெட்டிகள் கிடையாது. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுள்ள பெட்டிகளும், முன்பதிவு இல்லாத பெட்டிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளும் மட்டுமே இந்த ரயிலில் உள்ளன. இதனால் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே தற்போது வாரம் ஒரு முறை இயக்கப்படும் இந்த ரயிலை வரும் நாட்களில் தினம் தோறும் இயக்கினால் பயணிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என தமிழக, கேரள ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
