சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு வரக்கூடும் என்ற வதந்தி பரவியது. இதனால் அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் பெட்ரோல் பங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் எண்ணெய் நிறுவனங்களால் தேவையான அளவுக்கு பெட்ரோல், டீசல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்பது வதந்தி; வாகன ஓட்டிகள் நம்ப வேண்டாம். வாகனங்களில் பெட்ரோல், டீசல் போட்டாலே போதும். கேன்களில் பெட்ரோல், டீசல் வாங்கிச் செல்வது தேவையில்லாதது. சென்னை முதல் குமரி வரை எந்த பெட்ரோல் பங்க்குக்கு போனாலும் பெட்ரோல், டீசல் போட்டுக் கொள்ளலாம்
சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு வரும் என நினைத்து மக்கள் அச்சப்பட வேண்டாம். சமையல் சிலிண்டர்களுக்குத்தான் தட்டுப்பாடு உள்ளது; பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை. 7,000 பெட்ரோல் பங்க்குகளில் 21 நாட்களுக்கு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. வாகன ஓட்டிகள் அதிக அளவில் பெட்ரோல், டீசலை நிரப்பி செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
