மூடா முறைகேடு விவகாரம் சித்தராமையா நண்பருக்கு சொந்தமான ரூ.21 கோடி சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

மைசூரு: மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் (மூடா) சட்டவிரோதமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்க இயக்குனரகம் மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. முதல்வர் சித்தராமையாவின் நெருங்கிய நண்பரான எஸ்.கே. மரிகவுடாவுக்கு சொந்தமான 20.85 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மைசூரு வளர்ச்சி ஆணையம் (மூடா) தலைவராக இருந்த மரி கவுடா, சட்டவிரோதமான முறையில் அப்போதைய மூடா கமிஷனர் ஜி.டி.தினேஷ்குமார் உதவியுடன் மனைகள் பெறப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. தினேஷ் குமாரிடம் இருந்து மரிகவுடா முறைகேடான பலன்களை பெற்றுள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டதையடுத்து, முறைகேடாக ஒதுக்கப்பட்ட 6 மனைகள் மற்றும் 3 குடியிருப்பு வளாக கட்டிடங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சொத்தின் மொத்த மதிப்பு ரூ.20.85 கோடி என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மூடாவில் முறைகேடாக இடம் ஒதுக்கீடு செய்த வழக்கில் இதுவரை மொத்தம் ரூ.460 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஜி.டி. தினேஷ்குமார் உள்ளிட்ட பலரின் சட்டவிரோத சொத்துகள் தொடர்பாக 283 மனைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே மூடா சட்ட விரோத வழக்கு தொடர்பாக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பி.எம். பார்வதி உள்ளிட்ட 5 பேருக்கு க்ளீன் சிட் வழங்கிய ‘பி’ அறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு மீதான விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Related Stories: