புதுடெல்லி: பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் 22வது தவணை தொகை ரூ.19000 கோடியை 13ம் தேதி கவுகாத்தியில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி விடுவிக்கிறார் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும், விவசாயிகளுக்குச் சிறு முதலீட்டுத் தேவைகளுக்காக நிதியுதவி வழங்கும் நோக்கில் கடந்த 2019-ம் ஆண்டு பிரதம மந்திரி கிசான் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6,000 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை தலா ரூ.2,000 வீதம் மூன்று சமமான தவணைகளாகப் பிரிக்கப்பட்டு, இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.
இந்தியா முழுவதும் சிறு மற்றும் குறு விவசாயிகள், பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 22-வது தவணைத் தொகையான ரூ. 2,000-ஐ ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். வழக்கமாக ஹோலி பண்டிகைக்கு முன்னதாகவே இந்தத் தொகை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும்.ஆனால் இந்த முறை மார்ச் மாதம் தொடங்கியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின் 22வது தவணை தொகை ரூ.19,000 கோடியை வரும் 13ம் தேதி கவுகாத்தியில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விடுவிக்கிறார்.அன்று விவசாயிகளின் வங்கி கணக்கில் தலா ரூ.2000 வரவு வைக்கப்படும் என ஒன்றிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
