திருப்பதியில் இன்று ரதசப்தமி ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதியுலா

திருமலை: திருப்பதியில் இன்று ரதசப்தமியையொட்டி ஒரேநாளில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதியுலா வருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ரதசப்தமி விழா நடைபெற உள்ளது. ஒரே நாளில் சுவாமி 7 வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். தை மாதத்தில் அமாவாசை திதிக்கு பிறகு வரும் சப்தமி திதியில் (7ம் நாள்) ரத சப்தமி விழா கோயில்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்று காலை முதல் இரவு வரை மலையப்பசுவாமி 7 வாகனங்களில் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதனை ‘மினி பிரமோற்சவம்’ என அழைக்கப்படும். அதன்படி இந்தாண்டு ரதசப்தமி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாடவீதிகளில் மலையப்பசுவாமி மட்டும் 5 வாகனத்திலும், தாயார்களுடன் 2 வாகனத்திலும் பவனி வந்து அருள்பாலிக்க உள்ளார்.

அதிகாலை 5.30 முதல் 8 மணி வரை சூரியபிரபை வாகனத்திலும், காலை 9 முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும், 2 முதல் 3 மணி வரை சக்ரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். தொடர்ந்து மாலை 4 முதல் 5 மணி வரை கற்பக விருட்ச வாகனத்திலும், 6 முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனத்திலும், இரவு 8 முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்தில் சுவாமி அருள்பாலிக்க உள்ளார்.

ரதசப்தமியொட்டி கோயிலில் நித்யசேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நேர ஒதுக்கீடு டிக்கெட், விஐபி தரிசனமும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 7 வாகனங்களில் அருள்பாலிக்கும் மலையப்பசுவாமியை தரிசனம் செய்ய இன்று முதலே பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர். இதையொட்டி தேவஸ்தானம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: