ஜனநாயகத்தின் பாதுகாவலன் அல்ல வாக்கு திருட்டின் முக்கிய சதிகாரர் தேர்தல் ஆணையம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: ‘ஒரு நபருக்கு ஒரு வாக்கு’ என்ற அரசியலமைப்பு உரிமையை அழிப்பதற்கான ஆயுதமாக எஸ்ஐஆர் மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் அல்ல, பாஜவே யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. எங்கெல்லாம் எஸ்ஐஆர் உள்ளதோ, அங்கெல்லாம் வாக்கு திருட்டு நடக்கிறது.

குஜராத்தில் எஸ்ஐஆர் என்ற பெயரில் செய்யப்படுவது எந்தவிதமான நிர்வாக செயல்முறையும் அல்ல. அது ஒரு திட்டமிட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட, தந்திரமான வாக்கு திருட்டு. ஆயிரக்கணக்கான ஆட்சேபனைகள் ஒரே பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் அதிர்ச்சியூட்டும் ஆபத்தான விஷயம். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கும் குறிப்பிட்ட சமூகங்கள் மற்றும் வாக்குச்சாவடிகள் ஆகியவற்றிலிருந்து வாக்குகள் தேர்ந்தெடுத்து நீக்கப்பட்டுள்ளன.

பாஜ எங்கு தோல்வியை சந்திக்கக் கூடும் என்று கருதுகிறதோ அங்கெல்லாம் வாக்காளர்கள் தேர்தல் அமைப்பில் இருந்து மறைக்கப்படுகிறார்கள். இதே நடைமுறை ஆலந்திலும் (கர்நாடகா), ராஜூராவிலும் (மகாராஷ்டிரா) நடந்தது. இப்போது இந்த செயல் திட்டம் குஜராத், ராஜஸ்தான் மற்றும் எஸ்ஐஆர் அமல்படுத்தப்பட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கிறது.

இதில் மிகவும் தீவிரமான உண்மை என்னவென்றால், இனி தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின் பாதுகாவலனாக இல்லை, மாறாக வாக்கு திருட்டு சதியில் முக்கிய பங்கேற்பாளராக மாறியுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார். முன்னதாக குஜராத்தில் எஸ்ஐஆர் பணியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அம்மாநில காங்கிரஸ் கமிட்டி குற்றம்சாட்டி இருந்தது.

Related Stories: