மும்பை: ‘நீதி தாமதமானால் அது மறுக்கப்பட்டது மட்டுமல்ல, நீதி அழிக்கப்பட்டதுமாகும்’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறி உள்ளார். மும்பையில் நேற்று நடந்த இரு நிகழ்ச்சிகளில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பங்கேற்று பேசியதாவது: சட்டத்தின் ஆட்சியில் அமைப்பு ரீதியான தோல்விகள் ஏற்படும் போது உயர் நீதிமன்றங்கள் மேலும் முனைப்புடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.
நீதிமன்ற கதவு தட்டப்படும் வரை காத்திருக்கக் கூடாது. நீதிக்கான அணுகலை செயலற்ற உரிமையிலிருந்து அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சேவையாக மாற்றுவதே இலக்காக இருக்க வேண்டும். நீதி தாமதமானால் அது மறுக்கப்பட்டது மட்டுமல்ல நீதி அழிக்கப்பட்டதுமாகும். நீதியின் எதிர்காலம் நாம் வழக்குகளை எவ்வளவு திறமையாக தீர்க்கிறோம் என்பதை மட்டுமல்ல, அவற்றை எவ்வளவு புத்திசாலித்தனமாக தீர்க்கிறோம் என்பதையும் சார்ந்துள்ளது.
மத்தியஸ்தம், நடுவர் மன்றம் ஆகியவை நீதிக்கான மாற்று வழிகள் மட்டுமல்ல, நீதிக்கான கருவிகளும் கூட. அவை உறவுகளை பாதுகாக்கின்றன, செலவுகளையும் தாமதங்களையும் குறைக்கின்றன. எனவே மத்தியஸ்தம் ஊக்குவிக்கப்படும் சூழலை நீதிமன்றங்கள் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
