பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பெங்களூரு: மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2020ம் ஆண்டில் சையத் இந்திரிஸ் மற்றும் அல்தாப் அகமது ராதேர் ஆகிய இருவரும் தானிய பர்வீன் என்ற இளம் பெண்ணுடன் இணைந்து, லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பின் கிளையை தொடங்கியதுடன் பாகிஸ்தான் உள்பட பல நாடுகளில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளில் இளைஞர்கள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக மேற்கு வங்க காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இதனிடையில் இவ்வழக்கை மேற்கு வங்க காவல் துறையினரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கையில் எடுத்து கொண்டு விசாரணை தீவிரப்படுத்தியது. என்ஐஏ நடத்திய விசாரணையில் சையத் இந்திரிஸ், கர்நாடக மாநிலம், வடகனரா மாவட்டம், சிர்சியை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவரான அல்தாப் அகமது ராதேர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் என்ஐஏ அதிகாரிகள் சையத் இந்திரிஸை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்து நேற்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், உள்நாட்டில் தீவிரவாத அமைப்புகள் செயல்பட வசதி ஏற்படுத்தியதுடன் வெளிநாட்டில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் அனுப்பியது என்ஐஏ தரப்பில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றவாளிகளை கைது செய்யும்போது, சட்டவிரோத இலக்கியங்கள், தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் துண்டு அறிக்கைகள், வெளிநாடுகளுடன் தொடர்பில் இருந்ததற்கான செல்போனில் பேசிய ஆதாரங்கள் உட்பட பல சட்டவிரோத பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதுடன் வழக்கிற்கு ஆதாரமாக இருப்பதால், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories: