சிட்டிங் முதல் மாஜி வரை வெயிட்டிங்; உசிலம்பட்டி தொகுதி உனக்கா… எனக்கா…? அதிமுகவில் நடக்குது மல்லுக்கட்டு

மதுரை: உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் பலரும் தேர்தலில் சீட் கேட்டு போராடி வருகின்றனர். இதனால் யாருக்கு தருவது என்ற குழப்பத்தில் அதிமுக தலைமை குழம்பி வருகிறது. மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், உசிலம்பட்டி மிகவும் முக்கியமானது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவங்கிய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கான சட்டமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவத்தை உசிலம்பட்டி தொகுதியே கொடுத்துள்ளது.

இங்கு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் பல நேரங்களில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் பி.கே.மூக்கையாத் தேவர் உசிலம்பட்டி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக அதிக முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கந்தசாமி, ஆண்டித்தேவர், வல்லரசு, சந்தானம், கதிரவன் ஆகியோர் எம்எல்ஏக்களாக இருந்துள்ளனர்.

உசிலம்பட்டி தொகுதியில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக பார்வர்டு பிளாக் கட்சி செயல்பட்டு வருகிறது. வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட இப்போதே பலரும் முட்டிமோதி வருகின்றனர். இத்தொகுதி சிட்டிங் எம்எல்ஏ அய்யப்பன். ஓபிஎஸ் ஆதரவாளரான இவர், அதிமுக சார்பில் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

மீண்டும் இந்த தொகுதியில் அதிமுக அல்லது அதன் கூட்டணி சார்பில் போட்டியிடத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறார். ஓபிஎஸ்சின் இறுதி முடிவிற்காக காத்திருக்கிறார். எப்படியாவது தனக்கு இந்த ெதாகுதியை ஓபிஎஸ், அதிமுக – பாஜ கூட்டணியில் வாங்கி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

அதே நேரம் கடந்த தேர்தலில் இதே தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்த மகேந்திரன், அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் மூலம் உசிலம்பட்டியில் சீட்டை கைப்பற்றும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். டிடிவி.தினகரனின் நம்பிக்கைக்குரியவராக அமமுகவில் இருந்த மகேந்திரனை ‘வரும் தேர்தலில் உங்களுக்கு தான் சீட். அடுத்த எம்எல்ஏ நீங்கள் தான். இதற்கு நான் உத்தரவாதம்’ என உறுதியளித்து தான் அமமுகவில் இருந்து மீண்டும் அதிமுகவிற்கு கொண்டு வந்தார் உதயகுமார்.

இதனால், உசிலம்பட்டி இந்த முறை எனக்கு தான் என கூறியவாறு பெட்டியை தயார் செய்து வைத்துள்ளார் மகேந்திரன். இதோடு கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த பார்வர்டு பிளாக் கட்சி செயலாளரான கதிரவன், கடந்த சில ஆண்டுகளாக எடப்பாடியுடன் நட்பு பாராட்டி, அதிமுக கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். ‘‘உசிலம்பட்டி தொகுதி பார்வர்டு பிளாக் கட்சியின் தொகுதி, அதிமுக கூட்டணியில் நாங்கள் உள்ளோம். எனக்கு சீட் தருவதாக எடப்பாடி உறுதியளித்துள்ளார்.

எனவே, சீட் எனக்குத்தான், நான் மீண்டும் எம்எல்ஏ ஆவேன்’’ எனக் கூறி தேர்தல் முன் களப்பணிகளில் வேகம் காட்டி வருகிறார். அதிமுகவில், தொகுதி கூட்டணி கட்சிக்கு போகும்பட்சத்தில் இவருக்கு சீட் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். அதேசமயம், அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி, தனக்கு மீண்டும் போட்டியிட தலைமை வாய்ப்பளித்தால், நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையில் வேண்டப்பட்டவர்கள் மூலம் காய் நகர்த்தி வருகிறார்.

இப்படி ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்தவர்கள் காய் நகர்த்தி வரும் வேளையில், இந்த முறை உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் புது முகங்களுக்கும், இளைஞர்களுக்கும் தான் வாய்ப்பு தரவேண்டும் என்ற கோரிக்கையும் ஓங்கி ஒலிக்கிறது. கட்சி தலைமை இப்படியொரு முடிவிற்கு வந்தால் மருத்துவரணியைச் சேர்ந்த டாக்டர் சந்திரன் என்பவர் தனக்கு தான் சீட் என்றும், இளைஞர்களுக்கு வாய்ப்பு என்றால் மாணவரணியைச் சேர்ந்த எனக்கு தான் சீட் என வழக்கறிஞர் மகேந்திரபாண்டி என்பவரும் சீட் ரேசில் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

இதுதவிரவும், அதிமுகவில் மேலும் சிலர் சீட் கனவில் தங்களுக்கு வேண்டப்பட்ட கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள், சமுதாய தலைவர்கள், தொழிலதிபர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால், சீட்டுக்கான வேட்டையில் வடக்கம்பட்டி பட்டாசின் அதிர்வேட்டு சத்தம் உசிலம்பட்டியில் இப்போதே காதை கிழிக்கத் துவங்கி விட்டது.

Related Stories: