சென்னை: சென்னை, அடையாறு மண்டலம், திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளியில், “உலகம் உங்கள் கையில்“ எனும் மாபெரும் திட்டத்தின்கீழ், 4 கல்லூரி மாணவ-மாணவிகள் 1,627 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு, புதுமைப்பெண் எனும் திட்டத்தின் மூலம் 6,92,471 மாணவிகளுக்கும், தமிழ்ப் புதல்வன் எனும் திட்டத்தின் மூலம் 5,40,429 மாணவர்களும் மாதந்தோறும் ரூ.1,000 பெறுகின்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மேற்படிப்புகளுக்கான பல சலுகைகளை வழங்கி வரும் காரணத்தினால்தான் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேர்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து
வருகிறது.
ஒன்றிய அளவிலான உயர்கல்வி சேர்க்கைக்கான சதவிகிதம் 28.4 ஆனால் தமிழ்நாடு 47 சதவீதம் என்று மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில் சேர்ந்திருக்கிறார்கள். இது நாங்கள் சொல்கின்ற புள்ளி விவரம் அல்ல, அண்மையில் ஒன்றிய அரசு India Economics 2024-25 என்கின்ற அமைப்பு தெரிவித்திருக்கின்ற ஒரு செய்தி.
எனவே தமிழ்நாடு அரசு 47 சதவீதம் உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் இருக்கின்ற 36 மாநிலங்களில் முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் மயிலை வேலு, அசன் மவுலானா, சென்னை துணை மேயர் மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
