சென்னை: இந்திய உலகளாவிய கல்வி மாநாடு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இரண்டு நாட்களாக நடக்கிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது தமிழ்நாடு அறிவுசார் நகரத்திற்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் விருப்பக் கடிதங்கள் கையெழுதிடப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், செங்காத்துகுளம், மேல்மளிகைப்பட்டு மற்றும் இனாம்பாக்கம் கிராமத்தில் 872 ஏக்கர் பரப்பில் அமைய உள்ள தமிழ்நாடு அறிவுசார் நகரத்திற்கு தமிழ்நாடு முதல்வர் அடிக்கல் நாட்டினார். வரும் ஆண்டுகளில், உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் மற்றும் புத்தாக்கக் குழுக்களுடன் இணைந்து 25,000க்கும் மேற்பட்ட கற்பவர்களை இது உருவாக்கும். மேலும், விருப்பக் கடிதங்கள் (Letter of Intent) முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. அதன்படி,
* மெல்போர்ன் பல்கலைக்கழகம் சார்பில் விருப்பக் கடிதம் கையெழுத்தானது. குவாண்டம் கணினி மற்றும் வேளாண் தொழில்நுட்ப துறைகளில் பயன்பாட்டு ஆராய்ச்சி மையத்தை 20,000 சதுர அடியில் ரூ. 35 கோடி முதலீட்டில் ஐந்து ஆண்டுகளில் Knowledge Corridor-ஐ நிறுவிட விருப்பக் கடிதம் கையெழுதிடப்பட்டன. இதன்மூலம் 25 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 200 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.
* ஐஐடி சென்னை – மேம்பட்ட ஆட்டோமொட்டிவ் ஆராய்ச்சி மையம், மின்சார வாகனங்களுக்கான மாற்று ஆராய்ச்சி மையம் மற்றும் சோதனை ஆய்வகத்தை 40,000 சதுர அடியில் ரூ.200 கோடி முதலீட்டில் Knowledge Tower-ல் நிறுவிட விருப்பக் கடிதம் கையெழுதிடப்பட்டன. இதன்மூலம் 100 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 2,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.
* ஐஐடி சென்னை குளோபல் 20,000 சதுர அடியில் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி திறன் வசதி மையத்தை மேம்பட்ட திறன் மற்றும் புதுமையை முன்னெடுக்கும் வகையில் நிறுவிட விருப்பக் கடிதம் கையெழுதிடப்பட்டன.
* ஆர்க்ஸீ, கார்பன் பிடிப்பு மற்றும் நிலைத்தன்மை துறையில் 10,000 சதுர அடியில் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவிட விருப்பக் கடிதம் கையெழுதிடப்பட்டன.
* அக்யூமென், TIDCO உடன் இணைந்து ரூ.120 கோடி முதலீட்டில் Knowledge City-யை மேம்படுத்தும் நோக்கில் கூட்டாண்மை திட்டங்களை செயல்படுத்த விருப்பக் கடிதம் கையெழுதிடப்பட்டன. இதன்மூலம் 150 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 2,500 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் (Guidance Tamilnadu) உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களுடன் கீழ்கண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
* ஐஐடி சென்னை குளோபல் – உலகளாவிய திறன் மேம்பாடு, AI மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் மேம்பட்ட திறன் பயிற்சி மற்றும் ஸ்டார்ட்அப் புதுமை முன்னேற்றத்திற்கான கூட்டாண்மை திட்டங்களுக்கு வழிவகை செய்திடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
* இலினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி – சென்னையில் மேம்பட்ட உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் Health-AI துறைகளில் சிறப்பு மையத்தை நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
* கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் உடன் இணைந்து, உலகத் தமிழ் ஆராய்ச்சி கூட்டாண்மையில் வரலாற்று ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றுதல், மொழி கற்றல் வளங்களை விரிவாக்குதல் மற்றும் கல்வி பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. Chartered of Procurement and Supply Tier 2 மற்றும் Tier 3 நகரங்களில் கிளை அலுவலகங்களை நிறுவி, நிறுவன வலையமைப்புகளை புதிய வாய்ப்புகளுடன் இணைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
* அடோப் உயர்கல்வி மாணவர்களுக்கு இலவச Creative AI உரிமங்களை வழங்கி, இளைஞர்களை அதிநவீன டிஜிட்டல் கருவிகள் பயன்பாட்டில் வலுப்படுத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
* TIDCO நிறுவனம் University of East London உடன் புதுமை மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
* NISAU உடன் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தவும், TIDCO திட்டங்களில் கூட்டாண்மையால் முதலீட்டை ஈர்க்க வழிவகை செய்திடவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த மாநாட்டில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்,
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய், உயர்கல்வித் துறை செயலாளர் சங்கர், டிட்கோ தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா, மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, ஓபி ஜிண்டால் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் தினேஷ் சிங், University of East துணை வேந்தர் பேராசிரியர் அமண்டா புரோடெரிக், NISAU நிறுவனத் தலைவர் சனம் அரோரா, கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
