சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியது முதல் பெரிய அளவில் அதிமுகவை விமர்சிக்காமல் இருந்தனர். தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் களத்தில் இல்லாதவர்களை நாங்கள் விமர்சிக்கமட்டோம் என மறைமுகமாக அதிமுகவை விமர்சித்தார் விஜய். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரத்தில் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், அதிமுகவை நேரடியாகவே விமர்சித்தார்.
அதன் தொடர்ச்சியாக, சமூகவலைதளங்களில் அதிமுகவினரும் தவெகவினரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய் தொடர்புடைய கடந்த கால நிகழ்வுகளைச் சித்தரிக்கும் வகையில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட காணொலிகளைப் பரப்பி தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் நடந்தது. கூட்டத்தில் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது ஆதவ் அர்ஜுனா பேசியபோது, ‘‘நமது பசங்க இரண்டு நாளாக அதிமுகவை தாக்கி வருகிறார்கள். தயவுசெய்து வேண்டாம். இப்போது இறுதிப் போட்டிக்கு வந்துவிட்டோம். தவெக திமுக இடையில்தான் போட்டி. நாம் யாருடன் சண்டைபோட வேண்டும் என தெளிவாகிவிட வேண்டும். போட்டியில் இல்லாதவர்களுடன் சண்டையிட்டால் டைம் வேஸ்ட். ஆளாளுக்கு ஏதாவது பேசிவிட்டு போகட்டும். நமது ஒரே இலக்கு திமுக.
அதிமுக நான்கு ஆண்டுகளாக காணோம். எங்கு இருகிறார்கள் என்றே தெரியவில்லை. சமூகவலைதளத்தில் எங்கு உள்ளார்கள் என்றே தெரியவில்லை. நாம் பதில் கொடுத்து தேவையில்லாமல் அவர்களை ஏன் நாம் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். அதிமுக ஏற்கனவே காணாமல் போய்விட்டது. அதிமுக தலைமை மீதே மக்களுக்கு நம்பிக்கை இல்லாதபோது, அந்த தலைமை உருவாக்கும் 10 பேரை நாம் திட்டி என்ன செய்யப்போகிறோம்.
தேர்தல் உத்தி அவ்வளவுதான். நமது வலைதள வீரர்கள் திமுக மீது கவனம் செலுத்துங்கள்’’ என தொண்டர்கள் முன்னிலையில் பேசினார். அதிமுகவினருடன் சண்டையிட வேண்டாம், அவர்களை திட்ட வேண்டாம்; அவர்கள் போட்டியிலேயே இல்லை, அவர்களை விமர்சிப்பது ‘டைம் வேஸ்ட்’ என தொண்டர்களுக்கு பாடம் எடுத்த ஆதவ், தான் சொன்னதை தானே மறந்துவிட்டு அதே மேடையிலேயே அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். இது தவெக தொடண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
