பல்கலைக்கழக ஒழுங்குமுறை விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடையை விரைந்து நீக்க நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: பல்கலைக்கழக ஒழுங்குமுறை விதிகளுக்கு, உச்ச நீதிமன்றம் விதித்த தடையை விரைந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயர்கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடுகள் நிலவுவது உண்மை. பல்கலைக்கழக மானியக்குழு நடைமுறைப் படுத்தியுள்ள விதிகளின் மூலம் பாகுபாடுகளை களைய முடியும் என்பதும் உண்மை.

அந்த விதிகளுக்கு எதிராக சிலர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதற்காகவே விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டிய தேவை இல்லை. இப்போதைய விதிகளை கிடப்பில் போட்டுவிட்டு, 2012ம் ஆண்டின் விதிகளை மறு உத்தரவு வரும் வரை செயல்படுத்த வேண்டும் என்று கூறுவதும் நியாயமல்ல.

பல்கலைக்கழக மானியக் குழு (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல்) ஒழுங்குமுறை விதிமுறைகள் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை, மிகவும் தேவையானவை. இந்த உண்மையை உச்ச நீதிமன்றத்தில் போதிய தரவுகளுடன் எடுத்துக் கூறி பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒழுங்குமுறை விதிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை விரைந்து அகற்ற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: