சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள் 1 மற்றும் 2 ஆகியவற்றுக்காக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்கள் பின்பற்றப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2025 மார்ச் மாதம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதியும், தாள் 2க்கான தகுதித்தேர்வு நவம்பர் 16ம் தேதியும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், 2026 ஜனவரி 28ம் தேதி பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அரசாணையின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மதிப்பெண்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி பொதுப் பிரிவுக்கு மொத்த மதிப்பெண் 150 என்றும், தாள் 1க்கான தேர்வின் அதிகபட்ச தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் முதல் 90 சதவீத மதிப்பெண்ணும், தாள் 2க்கு 60சதவீதம் முதல் 90 சதவீதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பிசி, பிசி(எம்), எம்பிசி, மற்றும் டிஎன்சி, மாற்றுத் திறன்கொண்டவர்கள் மொத்த மதிப்பெண் 150, தாள் 1க்கு 50 சதவீதம் முதல் 75 சதவீதமாகவும், தாள் 2க்கு 50 சதவீதம் மதல் 75 சதவீதமாகவும், எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி பிரிவினருக்கு மொத்த மதிப்பெண் 150 என்றும், தாள் 1க்கு 40 சதவீதம் முதல் 60 சதவீதம், தாள் 2க்கு 40 சதவீதம் மதல் 60 சதவீதம் என்றும் வைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்ட மதிப்பெண்கள் 2025 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி நடத்தப்பட்ட தாள் 1 மற்றும் தாள் 2 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு அறிவிக்கை வரிசை எண் 5ல் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
