தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளதால் இதனை சமாளிக்க எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜ, அமமுக, பாமக(அ) உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. இந்த கூட்டணி அமையும் போதே பல்வேறு பிரச்னைகள் ஆரம்பிக்க தொடங்கி உள்ளன.
கூட்டணியில் கட்சிகள் பலரும் இந்த முறை அதிமுகவின் வெற்றி தொகுதிகளை குறிவைத்து சீட் கேட்டு வருவது தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் அதிமுகவின் கோட்டையாக இருந்த அவிநாசி (தனி) தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ வாக இருந்து வருபவர் தனபால். முன்னாள் சபாநாயகரான இவர். தனது தொகுதி பக்கம் எட்டிப்பார்த்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
கடைசியாக இவர் அவினாசி தொகுதி மக்களுக்கு காட்சியளித்தது அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்டத்தின் போதுதான். சென்னையிலேயே இருந்து வருவதால் கட்சி நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் உள்ள கோரிக்கைகள் மற்றும் தேவைகளை யாரிடம் சென்று கூறுவது என தெரியாமல் புலம்பி வருகிறார்கள். இதனால் வருகிற தேர்தலில் எப்போதும் தாங்கள் தொடர்பு கொள்ளும் வகையிலான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதில் அவிநாசி தொகுதி அதிமுகவினர் தீர்க்கமாக உள்ளனர்.
இதற்கிடையே இந்த தேர்தலில் தனது வாரிசான எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணை செயலாளர் லோகேஷ் தமிழ் செல்வனை களம் இறக்க தனபால் திட்டமிட்டுள்ளார். இதற்கான வேலையை அவர் தொடங்கியுள்ளார். இதனை அறிந்த அதிமுகவினர் தனபாலின் மகனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், கட்சி தலைமைக்கு லோகேஷ் தமிழ் செல்வனுக்கு சீட் வழங்க கூடாது என கடிதமும் கொடுத்துள்ளனர்.
இது தனபாலின் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்ப்பு காரணமாக அவிநாசி தொகுதியில் போட்டியிட பலரும் விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளனர். தற்போது டி.டி.வி. தினகரனும் அதிமுக கூட்டணியில் உள்ளதால், அவிநாசி தொகுதியை அவரும் தனது கட்சிக்கு கேட்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதனால் யாருக்கு சீட் கொடுப்பார் எடப்பாடி என தொண்டர்கள் மத்தியில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
