பழநி: பழநி தைப்பூச திருவிழாவில் இன்று நடக்கும் திருக்கல்யாணம், நாளை நடக்கும் தேரோட்டம் நிகழ்ச்சிகளை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழாவிற்கு காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்கின்றனர்.
இத்திருவிழாவிற்கு கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் துவங்கி விட்டனர். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா கடந்த ஜன.26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் வள்ளி – தெய்வானை சமேதரராய், முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்றிரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடக்க உள்ளது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை மாலை 4 மணிக்கு ரதவீதியில் நடைபெறுகிறது. பிப்.4ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும். அன்றிரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.
தைப்பூச திருவிழாவிற்காக தற்போதே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி நகரை நோக்கி வரத் துவங்கி உள்ளனர். இதனால் பழநி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, தாராபுரம், உடுமலை சாலைகளில் பாதயாத்திரை பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. வின்ச், ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். கூட்டம் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தரிசனத்திற்கு பக்தர்கள் சுமார் 3 மணிநேரம் அளவிற்கு காத்திருக்க வேண்டி இருந்தது. தைப்பூச திருவிழாவிற்கு மேலும் அதிகளவிலான பக்தர்கள் வருவர் என எரிபார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்களுக்கான அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகங்களின் சார்பில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்று மாவட்ட கலெக்டர் சரவணன், திண்டுக்கல் எஸ்பி பிரதீப், பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் மலைக்கோயில், அடிவாரம் பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.தைப்பூச திருவிழாவையொட்டி இன்று முதல் பிப்.3ம் தேதி வரை மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட உள்ளது.
* இலவச பஸ் சேவை
பழநி வரும் பாதயாத்திரையாக பக்தர்களின் நலனுக்காக இன்று முதல் பிப்.2ம் தேதி வரை சண்முகநதி, ராமநாதன் நகர், சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையில் இருந்து 3 இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது. காலை 4 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை இலவச பஸ் சேவை இயக்கப்படும். சண்முகநதி துவங்கி பைபாஸ் சாலை வழி, பாலசமுத்திரம் பிரிவு நிறுத்தம், கொடைக்கானல் பிரிவு நிறுத்தம், இடும்பன் குளம் நிறுத்தம் உள்ளிட்ட வழித்தடங்களில் பஸ் இயக்கப்படுகிறது.
