சிவகங்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்தார். இன்று காலயில் கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரியை திறந்து வைத்தார். புதிய பல்நோக்கு அரங்கத்தையும் திறந்து வைத்தார், திறந்து வைத்த பல்நோக்கு அரங்கத்துக்கு சி.சுப்பிரமணியன் பெயரை சூட்டினார். பின்னர் கழனிவாசல் பகுதியில் ரூ.100.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சட்டக் கல்லூரியை திறந்து வைத்தார். சட்டக்கல்லூரி வளாகத்தில் நடக்கும் விழாவில் 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
காரைக்குடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.13.6 கோடி மதிப்பில் 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சிவகங்கை மாவட்டத்திற்கான கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். பல்வேறு துறை கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார். மேலும் ரூ.2559.50 கோடி மதிப்பில் முடிவுற்ற 49 திட்டப்பணி களை திறந்து வைத்தார். காரைக்குடியில் ரூ.205.06 கோடி மதிப்பில் 15,453 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
* அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது;
சிவகங்கை என்றாலே சிலிர்ப்பு ஏற்படும். சிவகங்கை பலரின் தியாகத்தால் சிவந்த மண். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாகரிகம் ஒங்கி இருந்ததற்கான கீழடி தடயங்கள் கிடைத்த மண். ஒரு குடும்பம் வாழையடி வாழையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற மண் இது. மருது சகோதரர்களை தந்த மண் இந்த சிவகங்கை மண். வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், குயிலி உள்ளிட்டோரின் வீரம், தியாகத்தால் சிவந்த மண் சிவகங்கை; ஒன்றிய அரசால் மதுரை எய்ம்ஸ் அறிவித்து பணிகள் தொடங்கி 11 ஆண்டுகள் ஆகிறது.
திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஒரே நேரத்தில் 2 கல்லூரிகளை அறிவித்து திறந்து வைத்துள்ளோம். சிவகங்கை மாவட்டத்தில் 2,38,428 மேற்பட்ட பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். 31,000 பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தில் சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கையில் 65 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம்.
தமிழ்நாடு வளர்ந்துள்ளது என்று ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டியே தமிழ்நாடு வளர்ந்துள்ளது என்று சொல்கிறேன். தேர்தலுக்காக பல ஆதாரமற்ற குற்றங்களை எல்லாம் பிரதமர் பேசியிருக்கிறார். வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாக ஒன்றிய அரசு பாராட்டி உள்ளது. ஒன்றிய அரசின் தரவுகளை பிரதமரும், ஆளுநரும் படிக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது.
தமிழ்நாட்டு வளர்ச்சியை ஆளுநர் விமர்சிக்கிறார்; ஒன்றிய அரசு பாராட்டுகிறது. புதிய 100 நாள் திட்டத்தில் 40% நிதியை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என கூறியுள்ளது. ஒன்றிய அரசு கிராமப்புற மக்களை கைகழுவி விடுகிறது. 2011 அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த வாக்குறுதிகளையுமே நிறைவேற்றவில்லை. 2016 தேர்தல் அறிக்கையில் சொன்னதாவது எடப்பாடி பழனிசாமிக்கு நினைவில் உள்ளதா?
ஏற்கனவே சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாத எடப்பாடி பழனிசாமி அடுத்த வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் விடியல் பயணத் திட்டத்துக்குதான் முதல் கையெழுத்து போட்டேன். திமுக சொன்னதைதான் செய்யும் செய்வதைதான் சொல்லும். அடுத்தும் நமது திராவிட மாடல் ஆட்சிதான். மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
