புதுடெல்லி: கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி சசி தரூர் பாஜகவில் இணையப் போவதாக வெளியாகும் தகவல் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியின் எம்பியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூர் அக்கட்சியின் முக்கிய முகமாக அறியப்படுபவர். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே கட்சித் தலைமை மற்றும் மாநில நிர்வாகிகளுடன் கருத்து வேறுபாடு காரணமாக அதிருப்தியில் இருந்து வந்தார். குறிப்பாக கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தன்னைத் தொடர்ந்து ஓரங்கட்டி வருவதாக அவர் வேதனை தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் விரைவில் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்துள்ளார். சமீபத்தில் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி மற்றும் மாநிலத் தலைவர்கள் தன்னை மதிக்கவில்லை என்பதால் அவர் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் கூறுகையில், ‘தேவையான மற்றும் முக்கியமான தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்’ என்று பதிலளித்துள்ளார். அதேநேரம் திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடியை சசி தரூர் வரவேற்றது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. அவர் பாஜகவில் இணைந்தால் ஒன்றிய அரசில் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சசி தரூர் கட்சி மாறினால் 5 முதல் 6 நகர்ப்புற தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வியடைய நேரிடும் என்றும், பாஜகவின் வாக்கு வங்கி 30 சதவீதம் வரை உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரசின் முக்கிய முகமாக கருதப்படும் சசிதரூரை வளைத்து போட்டு, அவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கொடுக்க பாஜக தரப்பில் பேசப்படுவதால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
