சென்னை: மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பேரவை மரபின் படி மாநில அரசு தயாரித்து அளித்திருக்கும் ஆளுநர் உரையை வாசிக்காமல் தேசிய கீதம் இசைக்கப்பட வில்லை என்ற வழக்கமான காரணத்தைக் கூறி வெளியேறினார். கர்நாடக மாநிலத்திலும் இதுதான் நடந்தது. தமிழக முதல்வர் பேரவையில் சுட்டிக்காட்டியவாறு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்க வேண்டுமா என்பது குறித்து ஒத்த கருத்துடைய மாநில கட்சிகளுடன் கலந்து பேசி அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதுடன் ஆளுநர் பதவியை ரத்து செய்வதற்கும் முயற்சிக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும் பறிமுதல் செய்யப்பட்ட மீன் பிடி படகுகளை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
