சென்னை: தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை இன்ஜின் அரசாங்கம் மிகவும் அவசியம் ஆகும் என்று மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என்று தமிழில் கூறி தனது பேச்சை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகம் தான் பாரதத்தின் பண்பாட்டை வளம் நிறைந்ததாக்கியது. தமிழகம் அடையும் முன்னேற்றத்துக்கேற்ப நாடும் முன்னேற்றம் அடையும். கடந்த 11 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வரலாறு காணாத பணிகளை ஆற்றியிருக்கிறது. காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் இருந்தபோது தமிழகத்துக்கு குறைவான நிதியையே ஒதுக்கியது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் அதிகாரப்பகிர்வு வாயிலாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.3 லட்சம் கோடியை தமிழ்நாட்டுக்கு வழங்கியிருக்கிறது.
காங்கிரஸ்-திமுக மத்தியில் ஆளும் போது வழங்கிய நிதியோடு ஒப்பிடும்போது இது கிட்டதட்ட 3 மடங்கு அதிகம். கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக மத்திய அரசு ரூ.11 லட்சம் கோடி உதவி அளித்துள்ளது. ரயில் பட்ஜெட் எடுத்துக்காட்டை உங்களுக்கு சொல்கிறேன். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ரயில் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அளித்த தொகையைவிட 7 மடங்கு அதிக நிதியை அளித்திருக்கிறோம். தமிழ்நாட்டில் 80 ரயில் நிலையங்கள் மேலும் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. அவை மேம்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் போன்ற விரைவாக செல்லக் கூடிய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் கூட தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் இயக்கியுள்ளது.
முன்பெல்லாம், குறைவான விவசாயிகளிடம் மட்டுமே வங்கி கணக்குகள் இருந்தன. தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் வங்கி கணக்குகளை திறந்து கொடுத்தது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம், சிறுவிவசாயிகள், மீனவர்கள் கூட்டுறவு அமைப்போடு இணைத்து வருகிறது. விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மீது அதிக அழுத்தம் கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் உணவுப் பதப்படுத்துதல் துறையில் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. . தமிழ்நாட்டில் 6 கோடி முத்ரா கடனும், ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான உதவிகள் சிறு தொழில் முனைவோருக்கும் கிடைத்துள்ளது.
பாரதம் உலகெங்கும் இருக்கும் முதலீட்டாளர்களின் முதன்மையான விருப்பமாக ஆகி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளோடு ஒப்பந்தங்களை பாரதம் ஏற்படுத்தி கொண்டு வருகிறது. இந்த மகத்துவம் கொண்ட காலத்திலே தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை இன்ஜின் அரசாங்கம் மிகவும் அவசியம் ஆகும். மத்திய அரசோடு இணைந்து பயணிக்கும் அரசாங்கம், இசைவாக பயணிக்கும் அரசாங்கம் எப்போது ஏற்படுமோ, அப்போதுதான் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது மேலும் சுலபமாக இருக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் குழாய் வழியாக குடிநீர் பெருகி பாயும். இவ்வாறு அவர் கூறினார்.
ஊழல் வழக்கில் சிக்கியவர்களை மேடையில் வைத்தே ஊழலை ஒழிப்பதாக கூறிய பிரதமர் மோடி
மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டதில் பேசிய பிரதமர் மோடி, ஊழல் ஒழிப்பு பற்றிப் பேசியுள்ளார். ஆனால், அவரின் அருகில் இருந்த டிடிவி.தினகரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் மீதுள்ள ஊழல் வழக்குகள் குறித்து வசதியாக மறந்துவிட்டார் போல் தெரிகிறது என்று நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். குறிப்பாக, டிடிவி.தினகரன் மீது கடந்த 1996-97 காலகட்டத்தில் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்த 2 வழக்குகள் உள்ளது. அதேபோல், இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல வருமான வரித்துறையும் டிடிவி.தினகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தியது. இதுகுறித்த வழக்கும் நிலுவையில் உள்ளது. அதேபோல், அன்புமணி 2004-09 காலகட்டத்தில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள் புதிப்பித்தலுக்கான அனுமதியை முறைகேடாக வழங்கியதாக சிபிஐ பதிவு செய்த வழக்கு உள்ளது. சமீபத்தில்கூட அன்புமணியின் மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக மாநில நிர்வாகக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விஜய்யை விமர்சிக்காத தேஜ தலைவர்கள்
தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், டிடிவி.தினகரன், அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட தேஜகூ தலைவர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் பேசிய தேஜகூ தலைவர்கள் அனைவரும் திமுக எதிர்ப்பு என்ற ஒன்றை மட்டுமே மையமாகக் கொண்டு பேசினார்கள். அவர்களின் பேச்சில் திமுக எதிர்ப்பை நீக்கிவிட்டால் ஒன்றுமே மிஞ்சாது. அதேநேரத்தில், இவர்களில் யாருமே தேர்தல் போட்டியில் உள்ள மற்றொரு கட்சியான, பாஜவை தனது கொள்கை எதிரி என்று அறிவித்து, அவ்வப்போது அதிமுகவையும் பெயரளவில் விமர்சித்த தவெகவைப் பற்றியோ அல்லது அக்கட்சியின் தலைவர் விஜய் குறித்தோ மூச்சு கூட விடவில்லை. பாஜவை தங்களின் கொள்கை எதிரி என்று பெயரளவில் அறிவித்துவிட்டு, போகும் இடங்களில் எல்லாம் திமுகவை மட்டுமே குறிவைத்து விமர்சித்துவிட்டு, பாஜவை விமர்சிக்காமல், அந்தப் பெயரைக்கூட உச்சரிக்காமல் உள்ள தவெகவிற்கு இவர்கள் செய்யும் கைமாறா இது என்ற கேள்வி எழுகிறது.
அதிமுக பெயரையே உச்சரிக்காத மோடி
பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அதிமுக ஆட்சி அமையும் என பேசினார். அதே நேரத்தில் பிரதமர் மோடி 45 நிமிடங்கள் பேசினார். அவர் தனது பேச்சில் அதிமுக என்ற கட்சியின் பெயரை ஒரு முறை கூட உச்சரிக்கவில்லை. பாஜ, என்டிஏ கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்று கூறினார். தப்பி தவறி கூட ‘அதிமுக’ என்ற பெயரை அவர் உச்சரிக்கவே இல்லை. ஆனால் பாஜ, திமுக, காங்கிரஸ் கட்சிகள் குறித்து மட்டும் பல தடவை பேசினார். அதிமுக பெயரை மோடி உச்சரிக்காதது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026ல் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும் என பாஜ தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் அதிமுக ஆட்சி அமையும் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில், பாஜ தலைவர்களின் பேச்சுகள், கூட்டணி ஆட்சியை முன்மொழிவது போன்றே உள்ளன.
பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்: பிரதமர் முன்னிலையில் எடப்பாடி பேச்சு
மதுராந்தகத்தில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்ட மேடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இந்தியாவே இன்று மதுராந்தகத்தை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறது. பிரதமர் என்ன பேசுவார் என்று நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. எங்கும் மக்கள் வெள்ளம், மக்கள் கடல்போல காட்சியளிக்கிறார்கள். இதுவே இந்த கூட்டணியின் வெற்றிக்குச் சான்று. உரிய இடத்தையும் காலத்தையும் தேர்ந்தெடுத்து செயல்பட்டால் உலகத்தையே ஆளலாம். நமக்கும் அதுக்கான காலம் வந்துவிட்டது. மக்களை வாட்டிவதைக்கும் அரசு தேவையா? எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவோம். எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி, வலிமையான கூட்டணி.
தேர்தல் எனும் இந்த போரில் கூட்டணி கட்சி தலைவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிக்கொடி நாட்டுவோம். வரும் தேர்தலில் 210 இடங்களில் எங்கள் கூட்டணி வெல்லும். பெரும்பான்மையுடன் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும். தேர்தலில் நமது வெற்றிக்கு மக்கள் துணை நிற்பார்கள்; கூட்டணி கட்சியினர் எழுச்சியோடு உள்ளனர். அதிமுக ஆட்சியில் கேட்ட திட்டங்களை வழங்கியது ஒன்றிய அரசு. அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசிடம் இருந்து நிதி பெற்று பல திட்டங்களை செயல்படுத்தினோம். அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசு அனுமதியளித்த காவிரி நதிநீர் தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தவில்லை. கொரோனா போன்ற காலங்களில் மக்களின் உயிரை காப்பாற்றியவர் பிரதமர் மோடி. உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடிக்கு பொன்னாடையும், ஏலக்காய் மாலையையும் எடப்பாடி பழனிசாமி அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோன்று மதுராந்தகம் தேஜகூ பொதுக்கூட்ட மேடையில் டி.டி.வி.தினகரனுடன் எடப்பாடி பழனிசாமி கைகுலுக்கினார்.
எடப்பாடி தலைமையை முழு மனதோடு ஏற்கிறோம் -டிடிவி.தினகரன் பல்டி
பொதுக்கூட்டத்தில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பேசியதாவது: தமிழகத்தில் இந்த கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள எடப்பாடி பழனிசாமியின் தலைமையை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு வந்துள்ளோம். நாங்கள் எல்லாம் அம்மாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்து விட்டார்கள். புரட்சித் தலைவர் வழி வந்தவர்கள். எங்களுக்குள் சண்டை சச்சரவுகள் இருந்தது உண்மைதான். தமிழ்நாட்டின் நலன் மற்றும் அமமுகவின் நலனைக் கருதி பிரதமரின் அழைப்பை ஏற்று எங்கள் மனதில் இருந்த எல்லா கோப தாபங்களையும் விட்டு விட்டு, 2021ல் அமைக்க முடியாமல் போன அம்மாவின் ஆட்சியை உருவாக்க எந்த மன மாட்சியும் தயக்கமும் குழப்பமும் அழுத்தமும் இன்றி இந்த கூட்டணியில் எங்களை இணைத்துக் கொண்டோம். இந்தக் கூட்டணியின் வெற்றிக்காக அமமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் அயராது பாடுபடுவார்கள். ஒரு விஷயத்தில் எதிர்ப்பது என்றால் அதிலும் உறுதி; ஆதரிக்க வேண்டும் என்றால் அதிலும் உறுதியாக இருக்கும் தன்மையை ஜெயலலிதா எங்களுக்குக் கொடுத்துள்ளார். நாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பங்காளிகளாக இருந்தவர்கள். எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்திருந்தோம் என்பது உண்மை. இன்றைக்கு எல்லாவற்றையும் தூக்கியெறிந்து விட்டு பிரதமர் மோடி தமிழகத்தில் மக்கள் ஆட்சியை உருவாக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.
தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
மதுராந்தகத்தில் நேற்று நடந்த பிரதமர் மோடி தலைமையிலான பொதுக்கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட சுமார் 50 பேர் மதுராந்தகம் மாம்பாக்கம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். மோடி நிகழ்ச்சியை முடித்து திரும்பிய பிறகுதான் இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிய வருகிறது.
வாரிசு அரசியல் என்று வாரிசு அரசியல் தலைவர் பியூஸ்கோயல் பேச்சு
தமிழகத்தில் வாரிசு அரசியல் நடப்பதாக சென்னையில் முகாமிட்டுள்ள ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் குற்றம்சாட்டினார். அவரோ வாரிசு மூலமாகத்தான் அரசியலுக்கு வந்தார். ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலின் தந்தை வேத் பிரகாஷ் கோயல் ஒன்றிய அமைச்சராகவும், பாஜ பொருளாளராகவும் இருந்தவர். இவரது தாய் சந்திரகாந்த கோயல் எம்எல்ஏவாக இருந்தவர். பியூஸ்கோயல் வாரிசு மூலமாக அதாவது தந்தையின் வாரிசு அடிப்படையில்தான் அமைச்சர் பதவியை பிடித்தார். அவரது மகன் துருவ் கோயலும் தற்போது பாஜவில் சேர்ந்துள்ளார். இப்போது 3 தலைமுறையாக வாரிசு அரசியல் செய்யும் பியூஸ்கோயல், வாரிசு அரசியலை தமிழகத்தில் ஒழிப்பதாக கூறியுள்ளார். அவர்களது மேடையில் பாமக நிறுவனர் ராமதாசின் மகன் அன்புமணி, சசிகலாவின் அக்கான மகன் டிடிவி.தினகரன், ஜி.கே.மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன் ஆகிய வாரிசுகள் இருந்தனர். அதோடு சிறிய கட்சிகளின் தலைவர்களும் தங்களுடைய மகன், மனைவி என அனைவரையும் வாரிசுகளாக கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
